றஸ்மி மூஸா – ஸலபி - சூனியம் என்ற ஓன்று உண்டா ?

| 1 comments


இந்த தலைப்புக்குள்  நுழைவதற்கு முன்  இஸ்லாமிய சட்ட பொறிமுறையின் முக்கியமான  ஒரு விடயம் பற்றி  நாம் அறிந்து கொள்ள   வேண்டிய தேவை எமக்குண்டு. அப்போதுதான் நாம் ஆய்வு செய்ய வேண்டிய சூனியம் என்ற தலைப்பு தொடர்பாக இஸ்லாம் கொண்டுள்ள யதார்த்த  நிலையை  எம்மால் தெளிவாக   புரிந்து  கொள்ள முடியும்.

இஸ்லாமிய ஷரியத் தொடர்பில் அதாவது  ,  இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களான  நபி மொழி அல்லது அல்குரான்  வசனங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் போது  சில வேளை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் உண்டு. இது ஒரு  பொதுவான ஒரு விடயம். இது இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ள ஒரு நடைமுறை சிக்கல்தான் எனினும் இவ்வாறு இஸ்லாத்தில் எதாவது கருத்து  மயக்கங்கள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால்  அவற்றை இஸ்லாமிய சட்ட வரையறைக்குள் நின்று வேறு சில சட்ட உபாயங்கள் மூலம் தீர்க்க வேண்டிய ஒரு கடப்பாடு ஒரு ஆய்வாளனுக்கு அவசியம்.

ஒரு விடயத்தை பற்றி தெளிவில்லாமல்  இருந்தால் அது தொடர்பான வேறு எதாவது வலுசேர்ககூடிய ஆதாரங்களை தேடி அலசி ஆராய  வேண்டும். அப்போதுதான்  ஒரு சட்ட விடயம் தொடர்பாக ஒரு முடிவிற்கு எம்மால் வரமுடியும் .இதற்கு ஒரு சிறந்த வழியாகத்தான் அல்லாஹ் இஜ்திகாத் என்ற சட்ட பொறிமுறையையும் கூட எமக்கு அருளி உள்ளான். (இஜ்திகாத் தொடர்பாக பின்னர் சற்று விளக்கமாக கூற நினைகின்றேன் ).

எனவே ஷரியத் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மிக அவதானம் தேவை.  அவற்றை நுணுக்கமாக பகுத்தாய்வு  செய்ய வேண்டும் .பதிலாக, நாம் ஆய்வை மேற்கொண்டுள்ள விடயம்  எமது புலன் அறிவிற்கு சிந்திக்க முடியவில்லை என்பதால்  , அல்லது அதன் சான்றுகள் தெளிவில்லாமல் காணப்படுகிறது  போன்ற பல்வேறு  நொண்டி சாட்டுக்களை கூறி   அதிலிருந்து  இலகுவாக  யாரும் தப்பித்துவிட முடியாது. 
ஏனெனில்  இப்படியான  குறுகிய ஒரு  சிந்தனைப்போக்கு  பரந்து விரிந்து வியாபித்து செல்லும் இஸ்லாமிய அறிவியல் துறைக்கு சிலவேளை முட்டுக்கட்டையாக கூட அமையக்கூடும்.

இதற்காகத்தான்  இஸ்லாமியசட்டதுறையில்  நியாயிதல் என்ற விடயம் மிகவும்  அவசியமான ஒன்றாக இன்று கருதப்படுகிறது. நியாயித்தல் என்ற விடயம் இஸ்லாமிய சட்டத்துறையில் இன்றைய நவீன கால இஸ்லாமிய  அறிஜர்களின் ஆய்வுகளின் போது பயன்படுத்தப்படுகிறது. உலகளவிலும்   இச்சொல் பல துறைகளில் பிரபலமானது.  இந்த நியாயிதல்தான் இஜ்திகாத் என்ற சட்ட பொறிமுறையின் உள்ளடக்கமும் கூட.

இவற்றுக்கு அப்பால் இஸ்லாத்தில் உள்ள சஹீகான மற்றும் வலுவான சம்பவங்களை நாம்  நியாயபடுத்த மறுக்கும்  போது அது நடு நிலைமையான அறிவுத் தேடலுக்கு சிலவேளை  குந்தகமாக  அமையக்கூடும்.   குறிப்பாக  நபி (ஸல்) அவர்களுடைய நபி மொழிகள் தொடர்பான  அணுகு முறையின் போது  மிகவும் ஆழ்ந்து அவதானித்து கைக்கொள்ளவேண்டும்.

நபி மொழிகளில் ஏராளமானவை முன்னுக்கு பின் முரண் போன்று எமக்கு தோன்றலாம். உண்மையில் அவை முரண் அல்ல. அதனை நாம்  சரியானது   என  நியாயப்படுத்த முயற்சிக்கும் போது பல நிதர்சன  விடயங்கள் எமக்கு புலப்படகூடும் . அவ்வாறாக தோன்றும் விடயங்களை  நாம் முன்னர்  கூறியதுபோல்  ஏனைய ஆதாரங்களின் மூலம் நிவர்த்தி  செய்ய முயற்சித்தால் அதன் உண்மை தன்மை புலப்படும் .
உதாரணமாக   ஒன்றை சொல்வதானால் நபி (ஸல்) நீர் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தியதாகவும்,  அதே போல் சிறு நீர் கழிக்கும் போதும் நின்று கொண்டு கழித்ததாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது .ஆனால் நபி (ஸல்) அவர்களின் கண்டிப்பான உத்தரவு இவைகளை நின்றுகொண்டு செய்ய கூடாது  என்பதாக , இதேபோல் தோற்று நோய் உண்டு என்பதாகவும்   இல்லை என்பதாகவும் பல நபி மொழிகள் உண்டு.  இவ்வாறு பல நபிமொழிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடானதுபோல் உள்ளது .

ஆனால் நாம் இவைகளுக்கு இடையில்  நின்று சட்ட நுணுக்கம் பெற  முயற்சிகின்றோம்  நாம் எதனையும் நிராகரிக்க முனைவதில்லை.  இவ்வாறு ஏராளமான தகவல்களை நாம் குறிப்பிடலாம் .இவ்விடயதில் நாம் நியாயித்து ஒரு முடிவிற்கு  வர முயற்சிப்பதற்கு காரணம்  இவைகள் நம்பகமான தகவல் என்பதாலும் , இவைகளின்   அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதனாலுமாகும். எனவே நாம் இந்த முரண்பாடான விடயங்களை அப்படியே விட்டுவிடுவதில்லை எனவே இவைகளுக்கு பரிகாரம்தான்  இந்த நியாயிதல்  எனும்  கோட்பாடு காணப் படுகின்றது.இது இஸ்லாமிய  சரியா துறையில் இது ஒரு மயில்கல் என்று கூட கூறலாம்.
இந்த  வகையில்  இஸ்லாமிய அறிவு எனும்போது அது அல்லாஹ்வுடைய அருளாகும் .நபி ஸல் அவர்களுடைய  சொற்படி " யாருக்கு அல்லா  நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான் "  என்பதற்கேற்ப இந்த அறிவு அல்லா விரும்பும் நல்லடியார்களுக்கு  வழங்குகிறான் . இவ்வறிவு கற்றுணர்வதினால்   மட்டும்   கிடைப்பதில்லை.  இந்த கோணத்தில்தான்  இஸ்லாமிய சரியா துறை வளர்ச்சி அடைந்தும்  வந்துள்ளது  என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

இப்போது நாம் தலைப்புக்குள் நேரடியாக செல்வோம்  .  சிஹ்ர் என்ற அரபு பதம் மற்றும் நமது பிரயோக தமிழ் மொழி வழக்கில்  உள்ள சூனியம் , மந்திரம் போன்ற சொற்களின் அர்த்தங்கள் என்ன ? அது இஸ்லாமிய வரலாற்றில் என்னென்ன கோணங்களில் பயன்படுத்தபட்டுள்ளது? என்பதை  சரியாக புரிந்து கொண்டால் இந்த  விடயம் பற்றி ஓரளவு அறிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

சூனியம் என்றால் “ஒன்றை இல்லாமல் செய்வது அல்லது வேறிதாக்குவது”  என்ற பொருள் கொண்டுள்ளது யாருமே இல்லாத இடத்தை நாம் சூனியப் பிரதேசம் என்று கூறுகின்றோம் . எனவே ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு மத்தியில் இந்த சூனியம் என்னும் அம்சம் தீவினை செய்வதில் பங்காற்றி வந்துள்ளது என்பதை வரலாற்றில் அறியக் கூடியதாக உள்ளது . எனவே உலக வழக்கில் இந்த சூனியம் என்பது பிற மனிதர்களுக்கு மந்திர வார்த்தைகள் அல்லது செயற்பாடுகள் மூலம் தீவினை செய்வதை குறிக்கும். இதற்க்கு ஆங்கில வார்த்தையில் விச்கிராப் என்றழைக்கப் படும்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் சிஹ்ர் என்பது மாயாஜால விதைகள் செய்தல் மற்றும் மற்றவர்களுக்கு நோவினை செய்தல் போன்ற எல்லா அம்சங்களுக்கும் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது இதை நாம் நபிமார்கள் வரலாற்றின் ஊடாக பார்க்கக் கூடியதாக உள்ளது. அரபு அகராதியில் கூட சிஹ்ர் என்பது பொய்யை உண்மை தோற்றத்தில் கொண்டு வருதல் என்ற கருத்தில் காணப்படுகிறது”. இந்தவகையில் குரானில் பல இடங்களில்   இந்த  சிஹ்ர்  என்ற செயற்பாடுகள் மேற்கூறிய கருத்தளவில் அல்லா பயன்படுத்தியுமுள்ளான் என்பது தெளிவான சான்றாகும்.

நாம் தமிழில் மந்திரம் அல்லது வித்தை போன்ற எந்த சொல்லை பயன்படித்தினாலும்  அவை சிஹ்ர் என்று அல்லா குறிப்பிடும் சூனியம் என்ற சொல்  என்பதாகவே கருத்துக் கொள்ளபடுகிறது.இது நபிமார்களின் வரலாறுகளில் சான்றுப் படுத்தப்பட்டுள்ளது  அதாவது மூசா நபியும் தடியை பாம்பாக மாற்றினார் சூனியக் காரர்கள் கயிற்றை பாம்பாக மாற்றினர் .இரண்டும் ஒரே செயல்தான் ஆனால் நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கிய  இதை போன்ற சக்திகள் செயலில் ஒத்ததாக இருந்தாலும் கூட அதனை யாரும் மிகைக்க முடியாது என்பதாலும் மேலும் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அவை வந்துள்ளபடியாலும் அவை மூசா நபி செய்ததை நாம் மந்திரம் அல்லது சூனியம் என்று சொல்வதில்லை அதை முஹ்ஜிசத் அல்லது கராமத் என்றுதான் கூறுகின்றோம், மற்றுமொரு காரணம் எந்த ஒரு மனித சக்தியாலும் நபிமார்களுடைய அந்த அற்புதங்களை இல்லாமல் செய்ய முடியாது .இதனால்தான் மூசா நபி தனது தடியை பாம்பாக மாற்றியது மட்டுமல்லாமல் கடைசியில் பிராவ்னை அளிக்கவும் கடலை பிளக்கவும் அதே தடியை பயன் படுத்தி உள்ளனர் என்பது நமது உண்மை வரலாற்று சான்றாகும் .இதனால்தான் காபிர்களின் அந்த செயற்பாடுகள் தற்காலிகமாக மட்டும் மக்களை பரவசப்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
.


மூசா நபியின்  வரலாற்றில் நடந்தது என்ன ?

பிரவ்ன் தனது சூனிய சக்தி படைத்த பரிவாரங்களை தனது சபைக்கு அழைத்து மூசாவின் சக்தியை தவிடு பொடியாக்குமாறு அப்போது கூறுகின்றான் . சூனியக்காரர்கள் சூனியம் செய்த போது அல்லாஹ்வின் கட்டளை படி மூசா நபியும் தனக்கு வழங்கப்பட்ட அற்புத சக்தியை வெளிக்காட்டுகிறார்கள்.அவ்வாறு தனது சக்தியை வெளிப்படுத்திய போது சகல சூனிய காரர்களும் இஸ்லாத்தை அவ்விடத்தில் ஏற்றுகொண்டார்கள். இதை பின்வரும்  குரான் வசனம் மூலம் எம்மால் புரிந்து கொள்ளலாம் " நபியே  நீங்கள் வீசுங்கள் நாமும் வீசக் கூடியவர்களாக உள்ளோம், என நாம் கூறினோம்  ,  அவ்வேளை பிரவ்ன் தனது சூனியக் காரர்களிடம் , நீங்கள்  வீசுங்கள் என கட்டளை இட்டான் . அவ்வேளை மக்களுக்கு முன்னால் அவர்கள் சூனியம் செய்த பொது  அவ்விடத்ல் இருந்தவர்களுக்கு  ஒரு பயத்தை உண்டு பண்ணியது . சூநியகாறாக்கள்  பெரிய ஒரு சூனியத்தை அப்போது கொண்டுவந்தனர் .மேலும் நாங்கள் மூசவுக்கு கட்டளை இட்டோம் மூசவே "நீங்கள் உங்கள் கை தடியை கீழே போடுங்கள்  என அவர் நம் கட்டளைப்படி கீழே போட்ட போது அது அந்த சூனியக்காரர்கள் செய்ததை எல்லாம்  நாம் கீழே போட்டது விழுங்கிவிட்டது .” (7 :115 -117  ) என அலாஹ் கூறுகின்றான். இங்கு ஒரு சூனியம் எனும் போட்டி சத்தியத்துக்கும்  அசதியதுக்கும் இடையில் நடைபெறுகிறது.  இறுதியில்  சத்யம் வெற்றி பெறுகிறது.

இங்கு  சூனியம் என்ற விடயம் உண்மையான அல்லாஹ்வினால் கொடுக்கபட்ட செய்தானிய சக்தி என்பதை அல்லாஹ்  அதே சம்பவத்தில் கூறுகின்றான் . இதற்கு சான்றாக  சூனியக்காரர்கள் மூசா நபி முன்னிலையில்   அவர்கள் சூனியம் செய்தபோது அவர் கூட அதனை கண்டு பயம்கொண்டார்கள் என அல்லாஹ்வே குரானில் கூறுகின்றான் மூஸாவுக்கு அவர்கள் செய்தது அச்சத்தை ஏற்படுத்தியது என்பதாக (20: 67)  எனினும்  அல்லாஹ் அவருக்கு பயம் நீக்கி அருபுரிந்தான். எனவே இப்படியான அற்புதங்களை (முஹ்ஜிசத் மற்றும் கராமத் ) வளங்கி இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நிகராக இஸ்லாத்தை உலகில் பரப்புவதற்காக தான் அல்லாஹ் வழங்கியதாக வரலாறுகள் சான்று படுத்துகிறது.  எனவே நபி மூசா நபி அவர்களின் சம்பவங்களின் மூலம் தெரியவருவதாவது. அந்த காலத்தில் சூனியம் என்ற ஓன்று இருந்துள்ளது என்பதை இது  சான்று படுத்துகிறது.  எனவே மூசா அச்சம் கொள்வாரானால் நிட்சயமாக பயப்படக் கூடிய ஒன்றை தான் அவர் கண்டிருப்பார் என்பது இதன் மூலம் நிருபணமாகிறது.

இங்கு அவதானிக்கபட வேண்டிய விடயம் என்ன வென்றால் பிராவ்னுடைய சூநியக்காறாக்கள்  செய்தது  சூனியம் போன்று தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் இப்படியான ஒரு நிகழ்வு நடந்தது உண்மை .எனவே இப்படியான ஒரு கலை ஆரம்ப காலத்தில் இருந்துள்ளது என்பது வரலாறுகள் மூலம் சான்றுப்படுத்தப்பட்டுள்ளது . அல்லாஹ்   குரானில் கூறுகின்ற இந்த ஆதாரங்களே போதுமானது .

மேலும் இந்த சிஹ்ர் என்ற சொல் பல நபிமார்களுடைய காலங்களில்    பயன்படுத்தபட்டுள்ளது.  ஈசா நபி தொடர்பாக கூறும் போதும் இறைவன் சிஹ்ர் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான்  (பார்க்க 5:510) சுலைமான் நபி தொடர்பாக கூறும் போதும் அல்லா கூறுகின்றான் (பார்க்க (2.102 ) எனவே பல கோணங்களில் நின்று பார்க்கும் போது  சிஹ்ர்  என்பது நபி ஸல் அவர்களுடைய சமூகத்துக்கு புதிய விடயமல்ல . இதனால்தான் அரபிகள் கூட முகம்மத் சூனியம்  செய்கிறார் என கூறி வந்தனர்.   எனவே  சூனியம் தொடர்பாக நாம் சரியான விளக்கங்களை பெற அல்லாஹ்  கூறுகின்ற வரலாறுகளை நுணுக்கமாக  அறிந்து கொள்ள வேண்டும்.

இங்கு நபிமார்கள் பல விடயங்களை வெவ்வேறு கோணத்தில் செய்துவந்தாலும் காபிர்கள் அதை சிஹ்ர் என்ற வார்த்தை கொண்டே பயன் படுத் வந்துள்ளனர் . ஈசா நபி மரணித்தவர்களை உயிர்பித்தார். சுலைமான் நபி காற்றில் நடந்தார் மூசா நபி கடலை பிளந்தார் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் இவை அனைத்துமே காபிகள் பார்வையில் சூனியம் என்பதாகவே தென்பட்டது. இவைகளுக்கு சிஹ்ர் என்ற வார்த்தை தவிர வேறு எதுவும் அவர்களால் பயன்படுத்தப்படவில்லை.

மேலும் இச்சூனிய செயற்பாடுகள் உலக அளவில் இன்று நேற்று பயன்படுத்தபடவில்லை பண்டைய காலம் முதல் பயன்படுத்தப் பட்டுக்கொண்டுதான் வருகிறது. பொதுவாக மந்திரம் சில வித்தைகளை மக்கள் முன் செய்து மக்களை பரவசபடுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது .  இதே  போல் சூனியமும் சில நாசார செயற்பாடுகளுக்காக பயன்படுத்தபட்டு வந்துள்ளது  .

இந்தவகையில் சூனியம் அல்லது மந்திரம் என்ற  விடயத்தை உலக வரலாற்றில் பார்த்தால் பதின்மூன்றம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் சூனியம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றுகாணப்பட்டுள்ளது. இக்காலத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் இவை பரவலான ஒரு விடயமாகவும் இதில் அவர்களுடைய எண்ணத்தில் தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒன்றாகவும் காணப்பட்டு வந்துள்ளது.

இங்கிலாந்தில் விச் டாக்டர் WICHDOCTOR என்ற பெயரில் சூனியக்காரர்கள் பல மருத்துவ சேவைகள்   செய்து வந்ததோடு சூனிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  கி பி  1643  கால பகுதிகளில் பல சூனியகாரர்கள் பிறருக்கு தீங்கு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைகப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் உண்டு .பதின்மூன்றம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் சூனியம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றுக  காணப்பட்டுள்ளது .

புராதன காலத்தில் சூனியம் என்பது பலரை அச்சுறுத்தும் ஒன்றாக காணப்பட்ட அதே வேளை சூனிய காரர்களுக்கு பெரும் மதிப்பும் காணப்பட்டுள்ளது .அரசவையில் கிரேககாலத்தில் பல சூனிய காரர்கள் வேதனம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உண்டு .

அதற்கு இன்னோர் காரணம் எனவேன்றால் இவர்கள் மருதுவ   சமூகத்துக்கு சேவைகளையும் செய்து  வந்துள்ளனர். அதனால்தான் இங்கிலாந்தில் விச் டாக்டர் (சூனிய வைய்தியர்  ) என இவர்கள் அழைக்கபட்டுள்ளனர் ,என்பது வரலாற்றில் அறிய கூடியதாக உள்ளது . விச்க்ராப் என்றால் ஆங்கிலத்தில் சூனியம் என்று பொருள்.

மேலும் புராதன எகிப்தில் பபிலோனிய நாகரிகத்தில் கிறிஸ்துவுக்கு முன் 2000 ஆண்டில்   சூனியம் செய்பவருக்கு எதிராக பல தண்டனைகள் கொடுக்கப் பட்டுள்ளன.  இதற்கான சட்ட கோவையாக அக்காடியன் ( Akkadian )  காணப்பட்டுள்ளது  அதில் உள்ள ஒரு வாசகத்தை வாசிக்கும் போது சூனியம் அந்த வேளை இருந்துள்ளது என்பதை எம்மால் புரிந்து கொள்ளலாம்  அந்த வாசகத்தில் ஒரு பகுதியை கீழே காணலாம்.

“If a man has put a spell upon another man and it is not justified, he upon whom the spell is laid shall go to the holy river; into the holy river shall he plunge. If the holy river overcomes him and he is drowned, the man who put the spell upon him shall take possession of his house. If the holy river declares him innocent and he remains unharmed the man who laid the spell shall be put to death. He that plunged into the river shall take possession of the house of him who laid the spell upon him”
இந்த வாசகம் சொல்லும் விடயம் என்வென்றால் ஒருவர் சூனியம் செய்து மற்றவரை ஆபதில் சிக்க வைக்கும் ஒரு சூநியகாரனுக்கு என்ன தண்டனை என்பது பற்றியதாகும்.

எனவே இவ்வாறு சூனியம் என்பது பொதுவாக அன்று தொட்டு  இன்று வரையில் இருந்து வந்துள்ளது. இத்தொடரில் இது நபிமார்களுடைய காலத்திலும் அச்சுறுத்தலாக இருந்தபடியால்தான் இதிலிருந்து  நபிமார்களை அல்லாஹ் மீட்க அவர்களுக்கு அற்புதங்களை வழங்கினான்.சூனியம் மிகவும் அச்சுறுதான சமூகங்களுக்கு பதிலடி கொடுக்கத்தான். அல்லா அந்த வேளை அதனை மிகைக கூடிய பல சக்திகளை நபிமார்களுக்கு வழங்கினான்  என்பது உண்மையாகும். இதற்கு மூசா நபி அவர்களின் உதாரணம் ஒன்றுமே போதுமானது.

இந்தவகையில் இறுதியாக வந்த முஹம்மத்   நபிக்கு  குரானை  வழங்கி அதிலிருந்து ஈடேற்றம் கொடுத்துள்ளான் . ஏனனில்  குரான் அன்று இலக்கியத்தில் புலமை வாய்ந்த ஒரு சமூகத்துக்கு நிகராக முகம்மத் நபி ஸல் அவர்களுக்கு அல்லா வழங்கினான் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இதனால்தான் குரான் கூறும்போது " நம் இறக்கிய இவ்வேதத்தில் சந்தேகம் இருந்தால் இதே போல ஒன்றை முடிந்தால் கொண்டு வாருங்கள்  என்று சவால் விடுகிறது "

அல்லா மனித குலத்துக்கு எதிராக சில சக்திகளை படைதுள்ளானா?

அப்படியானால் அல்லாஹ் ஏன் சூனியத்தை மனிதசக்திக்கு எதிராக படைத்துள்ளான் என்று எம்மால் கேட்க முடியும் அல்லாஹ் செய்தானிய சக்தியையும் இறை வணக்கத்துக்கு மாறாகத்தான் படைத்துள்ளான். இதனால்தான் எத்தனையோ மனிதர்கள் செய்தானின் சூழ்ச்சியில்  அகப்பட்டு அல்லாஹ்வுக்கு எதிராக வாள்கின்றனர். பலருடைய வணக்க வழிபாடுகளை செய்தான் இன்றுவரை பாழ்படுத்தி கொண்டுதான் இருகின்றான். அதற்காக நாம் இவ்வாறு இருப்பது இஸ்லாத்துக்கு முரண் என்று கூற முடியாது. இதெல்லாம் இறைவனின் சோதனை காற்றில் பறந்து செல்லும் இறக்கை மனித குலத்தில் குழப்பங்கள் தீங்குகளை ஏற்படுத்தும் சக்தி  தனக்கென ஒரு கடல் ராஜ்ஜியம் எல்லாம் இறைவன் மனித சமூகத்தை சீர்குலைய செய்யும் அல்லா கொடுத்த சக்திதான் இதை யாரும் மறுக்க முடியாது அல்ல்ஹ்வே சொல்கின்றான் ." உனது சத்தத்தால் உன்னால் முடியுமானவர்களை வலி கெடச் செய் ,உனது குதிரை படையால் மற்றும் காலால் படையால் அவர்களுக்கு நீ ஏவு மேலும் அவர்களின் செல்வங்களில்  மற்றும் குழந்தைகளில் சேர்ந்து கொள் " எனவே செய்தானின் தீங்கு என்பது அல்லாஹ்வின் சோதனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

 “இந்தவகையில் சூனியம் என்பது கூட அவ்வாறுதான் நோக்கபட வேண்டும்  நபி (சல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற விடயத்தை நாம் விளங்கும் போது நாம் எப்படி  விளங்கி கொள்ள முனைய வேண்டும் என்றல் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதாகவும் ஆனால் அது அவர்களுக்கு எந்த பாரிய பாதிப்பையும்  ஏற்படுத்தவில்லை எனவும்  நம்ப வேண்டும் . காரணம் அல்லா ஏற்கனவே அவர்களுக்கு அந்த நேரமே சூனியம் செய்யப்பட்டது தொடர்பாக  அறிவித்து விட்டான்.  என அவரகளே தனது ஹதீஸில்  கூறியுள்ளது  சான்றாகும்.

அவர்கள் சொற்படி நபி ஸல் அவரளுக்கு சூனியம் செய்ப்பட்டதும தான் செய்யாததை செய்ததாக நினைக்கும் அளவுக்கு  என ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது  இந்நிலை 6  மாதங்கள் நீடித்ததாகவும் ஹதீஸ்களில் குறிபிடப்பட்டுள்ளது.  (பார்க்க புஹாரி 3268 , 5765)
இந்தவகையில் நபி ஸல் அவர்களும் ஒரு மனிதர் என்ற வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் சகல தீங்குகளும் அவர்களுக்கும் ஏற்படலாம். இது எல்லா நபிமார்களுக்கும் ஏற்பட்ட ஒன்றுதான். சில  நபிமார்கள்  கொல்லப்பட்டதாகவும் அல்குரானில் கூறப்பட்டுள்ளது    நபியே நீர் கேட்பீராக  ஏன் நீங்கள் இதற்கு முன் சென்ற நபிமார்களை கொலை செய்தீர்கள் என்று " பார்க்க (2:89) (3:83). எனவே சில நபிமார்கள் கொல்லப்பட்டர்கள் என்பதகாக அவர்கள் இஸ்லாத்தை அந்த சமூகத்துக்கு அவர்களால்  சொல்ல முடியவில்லை என நாம் யாரும் கூறுவதில்லை .ஈசா நபி  கூட வானத்திற்கு உயர்தபட்டார்கள் .இந்தவகையில் சூனியத்தால் நபிக்கு பாதகம் ஏற்பட்டது என்றால் முன் சென்ற நபிமாருக்கு நடைபெற்ற நிகழ்வுகளைவிட இது மிகவும் சிறிய சம்பவங்கள்தான்.
நபிமார்களுக்கு ஏற்பட்ட இந்த சம்பவங்கள் நாம் இல்லை என வாதிடும் அளவுக்கு வரலாறுகளில்   முரண்பட்ட சம்பவங்களாக  இல்லை. நபிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது என்பதற்காக சூனியம் இல்லை என வாதிட முனைகின்றோம். ஆனால் நபிமார்கள் பலர் இதை விட பாரதூரமாக கொலைசெய்யபட்டுள்ளார்கள் எனும்போது சூனியம் என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான் என்பதை யாரும் இலகுவாக புரிந்துகொள்வர்.

இதேபோன்றுதான் நபி ஸல் அவர்களுக்கு   உகது போரில் அவர்களுடைய கடவாய் பல் உடைக்கபட்டது என்பது நாம் அறிந்தவிடயமே .எனவே நபி ஒரு மனிதர் என்ற வகையில் ஏற்படும் தீங்குகள் என்பது பொதுவான விடயம் தான் . யூசுப் நபி மிக நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்தார்கள். யூனுஸ் நபி பல இன்னல்களை சந்தித்ததாக வரலாறுகளில் கூறப்பட்டுள்ளது அல்குரானிலும் அல்லா இது பற்றி கூறுகிறான் .

அதே நேரம் இஸ்லாம் தீங்கு தரும் பல விடயங்கள் எமக்கு கூறி அதற்கு பல பரிகாரங்களையும் சொல்லித்தருகிறது  பொதுவான மனிதனுக்கு தீங்கு தரும் சில விடயங்களை கூறி அதற்கு நிவாரணமாக அல்குரான் ஓதுவதையும் பல பிரார்த்தனைய்களையும் நிவாரணமாக சொல்லித்தருகிறது  உதாரணமாக அபூ ஹுரைரா ரலி அறிவிக்கு ஒரு நபி மொழியில் கண் சிருஷ்டி  பற்றி இஸ்லாம் கூறும் பொது கண் சிருஷ்டி  உண்மை என கூறுகிறது  (புகாரி-  5800 ) அதை நாம் விசுவாசிக்கிறோம்  அதற்காக  இது  மனிதனுக்கு எந்த  பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் கூற முடியாது அதிலிலிருந்து நிவாரணம் பெற இஸ்லாம் பல வழிகளை  காட்டி தருகிறது. அதைதான் நாம் பின்பற்றுகிறோம். சூரதுல் பகராவின் கடைசி இரு ஆயதுக்களையும் ஓதுதல் , ஆயதுல் குர்சி தினமும் ஓதுதல் , மொஅவ்விததைன் போன்ற சூராக்களை ஓதுதல் என்ற நீண்ட பட்டியலை இஸ்லாம் செய்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற சொல்லித்தருவதன் காரணம் இதுதான் .இவைகள் எல்லாம் செய்தானின் சகல தீன்குகளிளில் இருந்தும் பாதுகாப்பு பெற இஸ்லாம் வழி செய்துள்ளது

இதே போன்று தான் சாஸ்திரம் தொடர்பாக இஸ்லாம் கூறும்  போதும் செய்தான் வானவர்களின் உரையாடலின் ஓரிரு விடயங்களை கேட்டு அதனை பலதாக்கி மற்றவர்களிடம் பொய் சொல்லுவதாக நபி (ஸல்) கூறும் நபி மொழி கூறுகிறது.

செய்தான் சில  உண்மை செய்திகளை கேட்பகதான் இஸ்லாம்  சொல்லுகிறது ஆனால் அதிலிருந்து விலகி கொள்ளுமாறு ஏற்சரிக்கை விடுகிறது .அதில் சில உண்மைகள் உண்டு என இஸ்லாம் சொல்லும்போது நாம் அதனை மறுப்பதில்லை. அப்படியே  விசுவாசிக்கின்றோம். இதே போன்றுதான் சூனியமும் அணுகப்படவேண்டும்.

அப்படியானால்  குரான்தான் பரிகாரம் என்றால் ஏன் நபி ஸல் அவர்களுக்கு இது ஏற்பட்டது என்று நாம் கேட்கலாம் நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதின் நோக்கமும் அதுதான் அவர்களுக்கு சூனியம் செயப்பட்டதும் அவர்களுக்கு பாரிய எந்த பாதிப்பும் ஏற்படவில்லை காரணம் அவர்கள் அல்குரானோடு அதிகம் தொடர்பு உள்ளவர்கள் அதே நேரம் மனிதன் எனும் வகையில் இப்படியான நிகழ்வுகள் என்பது சகஜம்தான்  அதற்காக அல்லாஹ் அவரை சூனியம் ஏற்படாமல் பாதுகாத்து இருக்க வேண்டும் என்பதில்லை. .
பதர் போரில் மலக்குகளை கொண்டு வெற்றி கொடுத்த அல்லாஹ் உகது போரில் நபி ஸல் அவர்களுக்கு தோல்வியை வழங்கி அவர்களுடைய கடைவாய் பற்களும் உடைக்க பட்டது . எனவே இவ்வாறன சகஜமான விடயங்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம்  உண்டு .

நபிமார்களின் சட்டங்கள் பொது நடைமுறை சட்டங்கள் இல்லை

அடுத்த விடயமாக சூனியம் தொடர்பாக நாம் அணுகும் போது ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும்.  அதாவது நபி ஸல் அவர்களுக்கும் மூசா நபிக்குமிடையில் சூனியம் தொடர்பாக அணுகும் போது ஒரு சட்ட நுணுக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .இன்றுள்ள வணக்க வழிபாடுகள் முன்னுள்ள நபிமார்களின் வணக்கங்களுடன் பெயரால் ஒன்றாக இருந்தாலும் கருத்திலும் செயல் வடிவத்திலும் வித்யாசமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .எனவே முன் சென்ற நபி மார்களின் வரலாறுகள் அல்லது சட்டங்கள் என்பது எமது அதாவது முஹம்மத் நபியுடைய சமூகத்துக்கு ஒரு போதும் சட்டமாகாது இதை  நாம் தெளிவாக  புரிந்து கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை   பெற்று கொள்ள முடியும்.


இங்கு பிரச்சினை என்னெவென்றால் நபி ஸல் அவர்களுக்கு ஏற்பட்ட சூனியம் எனும் செயற்பாடு இஸ்லாத்தில் இல்லை என்ற ஒரு சிலரின் வாதமே. இவர்களுடைய அடிப்படை வாதத்திற்கு காரணம் முன்னுள்ளநபிமார்களின் சம்பவங்களை நபி (ஸல்)  அவர்களுடன் ஒப்பிட்டு நோக்கியதுதான்.  இந்த பிழையான அணுகு முறை மூலம் நபி ஸல் அவர்களின் சஹீகான பல நபி மொழிகளைகூட நிராகரிக்கக் காரணம் ஆகும்.

அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்துக்கும் நபிமார்களை அந்தந்த  சமூகத்தின் தேவை கருதியே அனுப்பியுள்ளான் என்பதை நாம்   வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் போது அறிந்து  கொள்ளலாம் .ஆதம் நபி முதல் கடைசியாக வந்த சகல நபி மார்களும் தங்களுடைய சமூக அமைப்புக்கேற்ப வித்தியாசமான அமைப்புகளில்   நபியாக  அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள்  அனுப்பப்பட்ட காலம் மற்றும் வாழ்வியல் அமைப்பு   சமூகவியல் நோக்கில் மிகவும் வித்தியாசமானது . ஒவ்வொரு சமூகத்தின் தட்ப வெட்ப சூழலுக்கேற்ப அல்லா நபிமார்களை தேர்வு செய்தான். இது நாம் வரலாற்றில் கற்றுக் கொண்ட  பாடம்.

ஒரு பலமுள்ள சமூகத்துக்கு கடமைகளை  ஏற்றத்தாழ்வாக வழங்கப்   படுவது  என்பது ஓர் சமூகவியல் நடைமுறை. உதாரணமாக 5 வயது குழந்தைக்கும் 50 வயது குழந்தைக்கும்  வளங்கப்படும் கடமைகள் மற்றும் அவர்களின் செயற்திறன்கள் என்பது வேறுபட்டது. இந்த வகையில் காலத்துக்கு ஏற்ப ஆயுள் நீடிக்கப்பட்ட மற்றும்  சக்திகள் பலமாக வளங்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு அல்லா மிகையான செயற்பாடுகளை வழங்கி யுள்ளான் என்பது இயல்பானது .இதில் நாம் மூக்கை நுழைத்து சிந்திக்க வென்றிய அவசியம் இல்லை. மேலும் இதை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் புராதன காலம் முதல் இன்று வரை மனித சமூகத்தின் உடலியல் விருத்தி  ஆயுள் காலம் மற்றும் உடலமைப்பு என்பனவைகள் மிகவும் வித்தியாசமானவை ,அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சக்தி  என்பன கூட வேறுபட்டவை உதாரணமாக சொல்வதானால் அல்லாஹ்வால்  அனுப்பப்பட்ட நபிமார்களையே நாம் குறிப்பிடலாம் .ஆதம் அலை அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் குடியேறச் செய்தான்  அவர்களுக்கு சகல அம்சங்களையும் சுவர்க்கத்தில் வழங்கினான் . அதே வேளை   நூஹ் நபி அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது  . இந்த விடயம் பைபிளும் குறிப்பிடப் பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் (2334- 2279) இருந்த  அக்காடியன் என்ற மொழிகளிலும் இது பற்றிக் கூறப் பட்டுள்ளதாக வரலாறுகளில் காணக் கூடியதாக உள்ளது .

முன்னுள்ள நபி மார்கள் வாழ்ந்த காலத்தை நாம் சிந்தித்து பார்த்தால் நாம் இதை இலகுவாக புரிந்து கொள்ளலாம் .இந்தவகையில் சுலைமான் நபி  930 வருடங்களும் ,சுஐப் நபி  882 வருடங் களும்  சாலிஹ் நபி 586 இத்ரீஸ் நபி 356 ஹூத் நபி 265 சகரியா நபி 207 இப்ராஹிம் நபி 195 சுலைமான் நபி 150 அய்யூப் நபி 146 மூசா 125 நபி யாக்கூப் 139 நபி யூசுப் நபி 110 யஹ்யா நபி  95 என்ற வயது அடிப்படையில் வாழ்ந்தாதாக சரித்திரங்கள் கூறுகின்றது. இந்த வயதுகள் சிலவேளை ஓரிரு வயது வித்தியாசங்கள் கூடிக் குறைத்தாலும் இங்கு நான் இதை கொண்டு வந்தது வயதை பற்றிய ஆய்வுக்காக அல்ல மாறாக புராதன வரலாறுகளில் இப்படிதான் மனித வாழ்க்கை இருந்துள்ளது என்பதை சொல்ல வந்தேன் .

 நபிமார்கள் அனுப்பப் பட்ட சூலல் என்பது அந்த சமூகத்துக்கு உரியது அவர்களின் உயரம் ,நிறம் ,ஆயுள் காலம் என்பன அந்த சமூகத்துக்கு அனுப்பப் படும்  நபிக்குரிய பண்புகள் அல்ல மாறாக அந்த சமூகத்தில் வாழும் மக்களின் சமூக கட்டமைப்பு எனவே நபி மட்டுமல்ல அந்த சமூகம் அனைத்துமே நபியை போன்றுதான் இருப்பார் என்னில் ஒரு நபி அந்த சமூகத்தில் இருந்துதான் வருவார் உதாரணமாக சுலைமான் நபி 950 வருடங்கள் வாழ்ந்தனர் அதே போல்  அவர்களின் உயரம் என்பன மிகப் பிரமாண்டம் எனக் கூறப்ப் படுகின்றது   

இதே போன்று சுலைமான் நபிக்கு ஜின்கள் மட்டுமல்ல அவரின் ஆட்சியில் இருந்த    தனி மனிதனுக்கு கூட அவ்வாறான சக்தியை வழங்கி இருந்தான். சுலைமான் நபியின் வரலாற்றில் வரும் பல்கீஸ் அரசின்  சிம்மாசனத்தை ஒரு மனிதனே  கொண்டு வந்தார் என்பதை நாம் குர்ஆனில் பார்கின்றோம்   இதை அல்லா இவ்வாறு குர்ஆனில் கூறுகின்றான் பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்என்று (ஸுலைமான்) கூறினார்.( 27-1)
மேலும்  சுலைமான் நபிக்கு வளங்கபட்ட  சக்தியின் ஒரு வடிவத்தை நாம் விளங்கிக் கொண்டால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒரு முறை) 'இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவுகொள்ளச் செல்வேன். ஒவ்வொரு துணைவியாரும் கர்ப்பமுற்று இறைவழியில் போரிடுகிற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும்' என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனைவிதான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத் தான் பெற்றெடுத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான்(அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களின் துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, இறைவழியில் போரிடும் குதிரைவீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார். புஹாரி 111

இங்கு சுலைமான் அலை அவர்கள் இன்சா அல்லா என்ற வார்த்தை பிரயோகத்தை பயன் படுத்தாத காரணத்தால்தான் இவருக்கு இந்த குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது என்பதை சொல்லத்தான் இந்த சம்பவத்தை இஸ்லாம் குறிப்பிடுகின்றது .மற்றும்படி அவருடைய சக்தியின் வல்லமையை குறிக்கப் பயன்படுத்தவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்க. ஏனனில் சக்தியின் வடிவம் என்பது பொதுவாக  எல்லோருக்கும்  தெரியும்  இந்த  சக்தியின்  வடிவம்  பற்றி  பைபிளிலும்  கூறப்  பட்டுள்ளது  .

இங்கு நபி ஸல் அவர்களது சமூகத்தை இந்த விடயத்தை ஒப்பிட்டு பார்த்தல் உண்மையில் இப்படி ஒரு உறவு எவ்விதத்திலும் சாத்தியமில்லை ஆனால் ஆயுள் காலம் மற்றும் சக்தி போன்ற விடயங்கள் மிகையாக கொடுக்கப் பட்டவர் ஒருவர்தான் இதை செய்ய முடியும் எனவே தனது ஆட்சியில் பல்கிசின் ஆசனத்தை ஒரு தனி மனிதன் கொண்டு  வர முடியும் என்றால் சுலைமான் அலை அவர்களுக்கு இந்த சக்தி என்பது மிகவும் இலகுவானது எனவே இந்த சக்தியை எப்படி நாம் மற்ற சமூகங்களிடம் ஒப்பிட்டு பார்க்க முடியும் ? மூசா நபிக்கு கடலை பிளக்கும் அளவுக்கு அல்லா சக்தியை வழங்கினான் .ஈசா நபிக்கு உயிர்ப்க்கும் ஆற்றால்   வளங்கப்பட்டன. மூஸா நபியின் சமூகத்துக்கு அல்லா நாம் இன்று பார்க்கும் கார்டூன் படங்களில் வருவது போன்று உணவு வகைகள் மன்னு சல்வா என்ற ஒரு தட்டில் தினமும் வானத்தில் இருந்து அல்லாஹ்வால் இறக்கப்பட்டன.

அதே வேளை இதனூடாக ஒரு சட்ட நுணுக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .இன்றுள்ள வணக்க வழிபாடுகள் முன்னுள்ள நபிமார்களின் வணக்கங்களுடன் பெயரால் ஒன்றாக இருந்தாலும் கருத்திலும் செயல் வடிவத்திலும் வித்யாசமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .எனவே முன் சென்ற நபி மார்களின் வரலாறுகள் அல்லது சட்டங்கள் என்பது எமது அதாவது முஹம்மத் நபியுடைய சமூகத்துக்கு ஒரு போதும் சட்டமாகாது இதை  நாம் தெளிவாக  புரிந்து கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை   பெற்று கொள்ள முடியும்.

முகமத்தின் ஸல் அவர்களின் சமூக ஆயுள் மிகவும் குறைந்தது மற்றும் அல்லாஹ்வின் புறத்தில் நேரடியாக நபி ஸல் அவர்கள் பிரயோகிக்கும் அளவுக்கு கூட எவ்வித சக்தியும் வளங்கப்படவில்லை.
. இதனால்தான் சுலைமான் அலை அவர்களுக்கு அந்த சிம்மாசனத்தை கண் மூடி திறப்பதற்குள் ஒரு மனிதன் அவர் முன்னால் கொண்ட வந்தார் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் ஆனால் நபி ஸல் அவர்கள் சில மணித்தியாலங்கள் மேல் வானத்தை கடந்து மிஹ்ராஜ் சென்றார்கள் என்பதை நபி ஸல் மட்டுமல்ல நாங்களும் இதற்கான சான்றுகளை நிருபிக்க எவ்வளவு முயற்சி செய்கின்றோம்.

இதற்கு காரணம் நபி (ஸல்) அவர்கள் சமூகத்துக்கு மற்ற சமூகங்களுக்கு கொடுக்கப் பட்ட எந்த  பலமான சக்தியும் கொடுக்கப்ப் படவில்லை இதுதான் யதார்த்தமான உண்மை. “ ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?” (53:12.) என்று அல்லா தனது திருமறையில் கேட்கின்றான் .முன்னுள்ள நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட  எந்த சக்தியும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லா கொடுக்காத காரணத்தாலேயே இவ்வாறு அவன் கேட்கின்றான்  ஆனால் முன்சென்ற நபி மார்கள் இதை விடவும் அற்புதங்களை தங்களது  வாள்நாளில் செய்து கொண்டே இருந்தனர் ஆனால் அந்த நபிமார்கள் தொடர்பாக எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. ஏனனில் மக்களும் அந்த நேரத்தில் சில வித்தைகளை கற்று தேர்ச்சி பெற்று இருந்தனர் இதையே நாம் மூசா நபியின் சூனியம் தொடர்பான சம்பவத்தில் கூட காண்கின்றோம்.

இதே போன்றுதான் ஏனைய  வணக்கங்களும் உதாரணமாக சொல்வதானால்  தொழுகை நோன்பு சகாத் போன்ற விடயங்கள் உட்பட அன்றாட  வாழ்வில் உள்ள திருமணம் கொடுக்கல் போன்ற நாங்கள்  தற்போது கடைபிடிக்கின்ற வணக்கங்கள் அனைத்துமே  ஆதம் நபி முதல் முஹம்மத் நபி வரை அருளப்பட்டதுதான் .ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமான  வெவ்வேறு சட்ட முறைகளோடு தான் அருளப்பட்டது. இது கால  தேச மனித சக்தி போன்ற பல பரிமாணங்களை கொண்டது. 

இந்தவகையில் அல்லா  வணக்கங்களையும் இவ்வாறு வித்தியாசமாகவே  அருளி உள்ளான். உதாரணமாக நபி (ஸல்)  அவர்கள் கூறும் போது "முன் சென்ற நபி மார்களுக்கு தொழுகை கட்டாயம்  வணக்க ஸ்தலங்களில் மட்டுமே    தொழ அனுமதி வளங்கப்பட்டது ஆனால்  நபி (ஸல்) அவர்கள் கூறும் போது எனக்கு பூமியில் எல்லா இடங்களும் தொழ அனுமதிக்கப் பட்டுள்ளது எவராவது ஒருவர் எந்த இடத்தில தொழுகை நேரத்தை சந்தித்தாலும் அவர் அங்கே   தொழுது கொள்ளட்டும் " என்ற இந்த நபி மொழி தொழுகை  என்பது எல்லா நபிமார்களுக்கும் ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது .அதே போல் தாவூத்  நபியின் நோன்பை மற்றும் தொழுகை பற்றி கூறும் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்'.

தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்  ஆஸ் (ரலி) அறிவித்தார். இங்கு  தாவூத் நபியின் கடமைகளை  நபி (ஸல்) அதனை விரும்பினாலும் இங்கு இது நமக்கு சட்டம் அல்ல தாவூத் நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்தை கூட அவர் ஒரு நொடிப் பொழுதில் ஒதிவிடுவார் என்றுதான் சொல்லப் படுகின்றது ஆனால் இந்த அம்சம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை ஜிப்ரயீல்தான் அவருக்கு ஓதிக் கொடுக்க வேண்டும் .
எனவே முன் சென்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அல்லது பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை நுணுக்கமாக சட்ட ஆய்வுக்கு உட்படுத்த கூடாது அது ஒரு வரலாற்று  படிப்பினையாக மட்டும்  எடுக்க  வேண்டும்.
சூனியம் தொடர்பாக இந்தவகையில்  சிலர் முரண்படுவது இந்த கோட்பாட்டில்  இருந்து  விலகித்தான். இதை  நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வகையில் அல்லா பல நபிமார்களுக்கு வழங்கிய   சக்தி என்பது அந்தந்த சமூகத்தை ஒப்பிட்டுதான் பார்க்க வேண்டும் தவிர இன்றுள்ள சமூகத்தை  சட்டரீதியாக ஒப்பிட்டு பார்க்ககூடாது .எனவே சூனியம் (சிஹ்ர்) என்பது நபி ஸல் அவர்களுக்கு செய்யப்பட்டது என்பது ஒரு முறைமை முன்னுள்ள நபிமார்கள் செய்தது என்பது ஒரு முறைமை இவ்விரண்டையும் ஒன்றோடொன்று குழப்பி நாம் ஆய்வு செய்யக் கூடாது சிஹ்ர் என்ற வார்த்தை சகலருக்கும் ஒரே வார்த்தையாக பயன்படுத்தி இருந்தாலும் அதன் அர்த்தங்களும் பிரயோகங்களும் மிகவும் வேறுபாடானது என்பதை இந்த கட்டுரை  மூலம் அறிந்து கொள்ளலாம்

1-காலத்துக்கு காலம் நபிமார்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டுள்ள முறைமை அவர்களின் சமூக அமைப்புக்குக்கேற்பவே, இங்கு வயது, வளங் கப்பட்ட  சக்தி ,என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டும் .
2-அல்லா நபிமார்களின் இத்தகைய வேறுபாடுகளுக்கு ஏற்ப அந்தந்த சமூகத்து அப்படியான சக்திகளை வழங்கி இருந்தான். சட்டங்களையும் அவ்வாறே வகுத்தும் கொடுத்துள்ளான்.
3-அத்தகைய சமூகங் களின்செய்திகள் வரலாறுகள் என்பன நமது சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியே தவிர பின்பற்றுவதற்கான ஆதாரபூர்வ முன்மாதிரி அல்ல,
4-நமது வணக்க வழிபாடுகள் மற்றும் செயற்பாடுகளில் நாம் சட்டமாக கொள்ள நபி (ஸல்) அவர்கள் எந்த வளிமுறையையும் காட்டித்தரவில்லை.

மேலும் உதாரணமாக சொல்வதானால்  தொழுகை நோன்பு சகாத் போன்ற விடயங்கள் உட்பட அன்றாட  வாழ்வில் உள்ள திருமணம் கொடுக்கல் போன்ற நாங்கள்  தற்போது கடைபிடிக்கின்ற வணக்கங்கள் அனைதுமே  ஆதம் நபி முதல் முஹம்மத் நபி வரை அருளப்பட்டதுதான் .ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமான  வெவ்வேறு சட்ட முறைகளோடு தான் அருளப்பட்டது. இது கால  தேச மணித சக்தி போன்ற பல பரிமாணங்களை கொண்டது.

முன்னுள்ள வேதங்களில் உள்ள அல்லது அல்குரனில் அல்லா படிப்பினய்காக சொல்லும் சம்பவங்களை ஆதாரமாக எடுக்க  முனைந்தால் அது முஹம்மது நபியின் மார்க்கத்தில் தவறுகள் விட வாய்ப்புக்கள் ஏற்படலாம்.

இந்த வகையில்தான் இந்த  சூனியம் தொடர்பாக  நபி மூசா வினுடைய காலத்தில் காணப்பட்ட சூனியம் தொடர்பான என்னப்பாட்டுக்கும் நபி ஸல் அவர்களுடைய காலத்து சிஹ்ர் தொடர்பான எண்ணப்பாட்டிற்கும்  இடையில் சில வேறுபாடுகளை உணர வேண்டியுள்ளது.
உதரணமாக தொழுகை முன்னுள்ள நபி மார்களுக்கு பள்ளிவாயலில் மட்டுமே தொழ அனுமதிக்கப்பட்டது. ஆனால் எமது சமுதாயத்துக்கு அவ்வாறல்ல  எந்த தூய்மையான இடத்திலும் தொழலாம் . தாவூத் நபிக்கு நோன்பு ஒரு நாள் விட்டு மறு நாள் நோன்பு பிடிக்க.  கடமயாக்கபட்டது ஆனால் எமது சமூகத்துக்கு ரமளான் மாதம் மட்டுமே நோன்பு கடமையாக அருளப்பட்டுள்ளது . இவ்வாறு ஏராளமான விடயங்களை குறிப்பிடலாம்  . இதே போலதான் எல்லா அமல்களும் செயன்முறையில் பாரிய வித்தியாசங்கள் உண்டு.
எனவே முன் சென்ற நபி மார்களுக்கு வழங்கப்பட்ட அல்லது பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை நுணுக்கமாக சட்ட ஆய்வுக்கு உட்படுத்த கூடாது அது ஒரு வரலாற்று  படிப்பினையாக மட்டும் இருக்க  வேண்டும். சூனியம் தொடர்பாக இந்தவகையில்  சிலர் முரண்படுவது இந்த கோட்பாட்டில்  இருந்து  விலகித்தான். என்பது மட்டும் உண்மை எனவே சூனியம் என்ற விடயம் மந்திர சக்தி போன்று மனிதனுக்கு தீங்கு தரக்கூடிய பல விடயங்களையும் உள்ளடக்கியது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிஹ்ர் என்ற அமைப்பில்  சுலைமான் நபிக்கு அல்லாஹ ஜின்களை வசப்படும்  சக்தியை வளங்கினான் .ஈசா நபிக்கு மரணித்தவர்களை உயிர்பிக்கும் சக்தியை வழங்கினான் .இதே போல்தான் நபி ஸல் அவர்களுக்கு அல்குரானை வழங்கி இப்படியான சிஹ்ர் போன்ற செய்தானியதனமான தீங்குகளில்  இருந்து பாதுகாப்பு பெற குரானை அருளி வழி செய்துள்ளான் . எனவேதான் நபி ஸல் அவர்களுக்கு முன்னுள்ள நபிமார்களுக்கு வழங்கபட்ட எதுவுமே எந்த சக்தியாகவும் நபி ஸல் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை

இந்த வகையில்தான்  நபி ஸல் அவர்களுக்கு ஒரு படிப்பினையாக அல்லா இவ்வாறு சூனியம் செய்து அதனை அல்குரானை கொண்டு நிவாரணம் ஆகவும் ஆக்கியுள்ளான் .இதன் மூலம் அல்லாஹ்வின் மகிமையையும் குரானின் சக்தியையும் வெளிப்படுத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடாக கூட இருக்கலாம்.

நபி ஸல்  தொடர்பாக சூனியம் செய்யப்பட்ட சம்பவம் என்பதை இந்த நான் மேற்கூறிய கோணத்தில் இருந்துதான் நோக்க வேண்டும் இந்த நபி மொழியில் " நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செயப்பட்டது அவர்கள் செய்யாத ஒன்றை செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கபட்டர்கள். ஒரு நாள் என்னை அழைதார்கள்.  எனக்கு நிவாரணம் கிடகும் அளவுக்கு இறைவன் வழியை காட்டிவிட்டான் என்பது உமக்கு தெரியுமா?”  என்று கேட்டார்கள்.  இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர் .அவர்களில் ஒருவர் தலை பகுதியில் அமந்து கொண்டார் . மற்றவர் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார் .இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன?  என ஒருவர்  மற்றவரிடம்  கேட்டார்

இவருக்கு சூனியம் செய்யப்பட்டது என ஒருவர் மற்றவரிடம் கூறினார் இவருக்கு சூனியம் செய்ய்தவர் யார்? “ என முதலாமவர் கேட்டார் லபீத் பின் அஹ்சம் என இரண்டாம் அவர் பதிலளித்தார் . எதில் சூனியம் செய்யப்பட்டுள்ளது ?  என முதலாம் அவர் கேட்க அதற்கு இரண்டாமவர் சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பெரிட்ச்சம் மரத்தின் பாளையிலும் சூனியம் செய்யப்பட்டுள்ளது   என்று விடை அளித்தார்.  எந்த இடத்தில சூனியம் வைக்கப்பட்டது ?  என முதலாமவர் கேட்டார். தர்வான்என்ற இடத்தில என  இரண்டாமவர் கூறினார்  .பின்னர் அந்த கிணற்றுக்கு சென்று திரும்பி வந்தார்கள் .அங்குள்ள பேரிச்சம் மரங்கள் செய்தானின் தலைகளை போல் இருந்ததாக கூறினார்கள் .அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா?  என நான் கேட்டேன்   இல்லை அதற்கு அல்லா எனக்கு நிவாரணம் தந்துவிட்டான்.  என பதிலளித்தார்கள் .மக்கள் மத்தியில் தீமைகளை பரப்பக்கூடாது என நான் அஞ்சுகிறேன்.  என பதில் உரைத்தார்கள் பின்னர் அந்த கிணறு மூடப்பட்டது .
அறிவிப்பவர் ஆயிஷா ரலி
(புகாரி 3268)
( இதே கருத்தை பிரதி பலிக்கும் பல ஹதீஸ்களும் இதே வசன நடையில் கொஞ்சம் விலகி நின்று ஒரே கருத்தை தரும் பல சஹீகான நபி மொழிகளும் உண்டு)

இந்த நபி மொழி ஒரு ஆதாரபூர்வமானது .இது நபியின் மனைவியரில் மிக முக்கியமான ஒருவரால் அறிவிக்கப்பட்டுள்ளது .   இந்த நபி மொழியில் பாரியளவு நபி அவர்கள் தாக்கம் கொண்டதாக எதையும் சொல்லவில்லை. தான் செய்யாததை செய்ததாக நினய்கும் அளவுக்கு என ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது    6 மாதங்கள் நீடித்ததாகவும் வேறு ஹதீஸ்களில் குறிபிடப்பட்டுள்ளது .இது சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் நிகழ்வுதான் .இது இஸ்லாமிய பிரச்சாரதுக்கோ அல்லது இறைசிந்தனைக்கு எதிராக நிகழ்ந்தது  என சொல்ல முடியாது . 23 வருட காலத்தில் 6 மாதங்கள் என்பது சாதாரண விடயம்தான்.

பொதுவாக ஒரு விடயம் தொடர்பாக எதாவது புரிந்துகொள்வதில் மயக்கம் இருந்தால் அவ்விடயம் தொடர்பான வலு பற்றி சற்று மறு ஆய்வு செய்யலாம்.  அது சாதாரண சட்டதிற்கு உட்பட்டதுதான் . ஆனால் சூனியம் பற்றி பொதுவாக பல செய்திகள் பதிவு செய்யபட்டுள்ளது .குரானிலும் பல வசனங்கள் உள்ளன. எனெவே இதனை பற்றி கூடுதலாக அலச வேண்டிய தேவை இல்லை  . இது ஹதீஸ் துறையில் அரிய வகை ஹதீஸ்(சாத்) என்பதுமில்லை. இது தொடர்பான பல ஹதீஸ்கள் உண்டு. மேலும் நாம் முன்னர் கூறியது போல் இந்த சம்பவங்கள் அறிவிக்கப்பட்டது  நபியின் மனைவியர்களில் மிகவும்  முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க  விடயமாகும்.

மேலும் அல்லாஹ அல்குரானில் கூட ஏற்கனவே  நபியவர்களுக்கு  சூனியம் செய்யப்பட்டதை சூசகமாக கூறுகின்றான்  சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே நீங்கள்   பின்பற்றுகிறீரா? என அநீதி  இளைத்தோர் இரகசிய்ம்மாக கூறியதையும் உம்மிடம்  செவி கொடுத்த போது எதை செவி கொடுத்தார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம் (17 :47)  என அல்லா கூறுவதிலிருந்து நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்பதும் புலனாகிறது காரணம் இந்த வசனத்தில் நபி அவர்களே மஷ்ஹூர் என்ற பதம் பயன்படுத்தபட்டுள்ளது . இவ்வாறு சில நபிமார்கள் தொடர்பாகவும் அல்லா நபிமார்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்பதை காபிர்கள் கூறியதாக குரானில் கூறினாலும் இந்த இடத்தில ஏற்கனவே பல நபி மொழிகள் முகமதுக்கு சூனியம் செய்யாட்டதாக  உள்ளதால் மேற் கூறிய குரான் வசனமும் எமக்கு வலுவாக உள்ளது..

இங்கு மூசா நபியை பார்த்தும் அல்லா கூறும் போதும் "மூசாவே உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன் என பிரவ்ன் அவரிடம் கூறினான்  (17 : 101 )  என கூறுகிறான் . இங்கு மூசாவிடம் பிரவ்ன் இவ்வாறு கூறும் போது மூசா அல்லாஹ்வின் புறமான  அற்புத சக்தி கொடுக்க பட்டிருந்தாகள் .ஆனால் நபி முஹம்மத் ஸல் அவர்களுக்கு அராபிய அராபிய காபிர்களிடமிருந்து தம்மை பாதுகாக்க இத்தகைய சக்தி படைத எதுவுமே நபியிடம்  காணப்படவில்லை .

இப்படி முன்னுள்ள நபிமார்கள் சந்தித்த எதுவுமே முஹம்மத் நபி சந்திக்கவுமில்லை. அல்லாஹ் நபிக்கு இந்த அல்குரனை தவிர எதையுமே கொடுக்கவுமில்லை .அல்லாஹ் கொடுத்ததெல்லாம் குரான் என்ற அற்புதத்தை மட்டுமே .  நபியவர்கள் ஒருபோதும் தனது மாயவித்தைகளை காட்டி இஸ்லாமிய பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை  என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்

பொதுவாக  இப்படியான தீங்குகளில்  இருந்து பாதுகாப்பு  பெறவே நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் பின்ன்னாலும் குரானை ஓதுமாறு எம்மை  பணிதுள்ளர்கள் .  யாரவது ஒருவர் தினமும் குரான் ஓதி வந்தால் இவைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால்தான் நபியவர்கள்  தினமும் குரானை தொழுகைகளுக்கு பின்னால் ஒதுமாறும் மற்றும் விசேடமாக சில சூராக்களை வீடுகளில் ஒதுமாறும் எம்மை பணித்துள்ளார்கள் . இதை நாம் முன்னர் தெளிவாக கூறியுள்ளோம்

எனவே மனித சமூகத்தை  அல்குரானுடன் ஒன்றிய சமூகமாக உருவாக்கவும் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகளை  ஒரு சோதனையாக செய்தான் மூலம் ஏற்படுதியுள்ளான்  என்பதை  ஒவ்வொரு அடியானும் புரிந்து நடக்க வேண்டும் .

எனவே உலகம் அழியும்வரை  செய்தான் உலகில் மூமின்களுக்கு எதிரியாக இருப்பதால் இப்படியான தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற நாம் அல்லாஹ்வின் தூதர் காட்டி தந்த வழிகளின்பால் கவனம் செலுத்த  வேண்டும்.


1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

    குர்ஆன் ஹதீஸில் உள்ள சூனியத்தை வைத்த பந்தயம் கட்டி முடிச்சாச்சு..

    குர்ஆன் ஹதீஸ் இல்லை என்று சொல்லுகின்ற ஜோசியம் இப்போ பந்தயத்துல நிக்குது...

    அடுத்து...

    தனது அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்று ஏற்கனவே பலவற்றை மறுத்து, தற்போது எதை எதை மறுத்து, தன் சூனிய பேச்சால் மதி மயங்கிக் கிடக்கும் ஆட்டு மந்தைகளை தன்னைப் போல் இறை மறுப்பாளர்களாக மாற்றப் போகின்றாரோ (மரியாதை கொடுத்தாச்சு)!

    யா அல்லாஹ்...

    உன்னை ஈமான் கொண்ட இந்த சமுதாயத்தை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக!

    வழி கெட்ட, வழி தவறிய தலைவர்களுக்கு நேர் வழியை கொடுப்பாயாக!

    அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களை மட்டும் தண்டிப்பாயாக!

    ஆட்டு மந்தைகளாக அறிவில்லாமல் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் மக்களை நேர்வழி பெறுவதற்கு அருள் புரிவாயாக!

    ஆமீன்.

    ReplyDelete