பிறை தேசியமா சர்வதேசமா ? இலத்திரனியல் நூல்

| 1 comments
   




பிறை என்பது பாரிய பிரச்சினைக்குரிய மறைபொருள் அல்ல .

தேசியமா சர்வதேசமா ? இலத்திரனியல் நூல்

ஆய்வு றஸ்மி மூஸா சலபி MA



(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (2:189)  அல்லாஹ் இங்கு காலம் காட்டும் ஒரு அம்சமாக பிறையை இந்த வசனத்தில் சுட்டிக்காட்டுகின்றான்.

இந்த வகையில் இஸ்லாமிய காலம் மற்றும் வணக்க வழிபாடுகளை தீர்மானிக்கும் அம்சமாக பிறை காணப்படுகின்றது. எனினும் பிறை பார்த்தல் தொடர்பாக மிக நீண்ட காலமாக பல சர்ச்சைகள் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய சமூகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை நாம் பார்க்ககூடியதாக உள்ளது

இஸ்லாத்தில் பிறை பார்த்தல் என்ற விடயம் என்பது ஒரு முக்கிய இடத்தை பிடிப்பதற்கு அடிப்படைக் காரணம் பிறை என்ற அம்சத்தின் அடிப்படயில் இஸ்லாமிய நாட்கள் கணக்கிடப்படுவதும், அந்த அடிப்படியில் இஸ்லாமிய கலண்டர் ஏற்படுத்தப் பட்டுள்ளதுமாகும்.அதே வேளை ரமலான் தலைப்பிறை மற்றும் இரு பெருநாட்களை தீர்மானிப்பதில் இவை பிரதான சர்த்தாக கொள்ளப்படுகின்றது என்பதினாலுமாகும்.

எனினும் இஸ்லாமிய கலண்டர் மற்றும் நாட்களை தீர்மானிப்பதில் பிறை முக்கிய இடத்தை வகிப்பதால் கலண்டர் விடயத்தில்பாரிய சிக்கல் ஏற்படுவதில்லை.பொதுவாக நாட்களை கணக்கிடும்போது  யாரும் இதன சரியான தோற்றத்தின் தன்மை மற்றும் காலம் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை  . குறிப்பாக பொது மக்கள் இந்த விடயத்தில் தலை இடுவதில்லை.குறிப்பிட்ட நிறுவனங்கள்  பிறை தொடர்பாக முடிவுகளை அறிவிக்கும் .மக்கள் அதை பின்பற்றுவர்

குறிப்பாக வருடத்தில் ஒரு தடவை வரும்  இரு பெருநாட்கள் மற்றும் ரமலான் தலை பிறையை தீர்மானிப்பது போன்றன தொடர்பாகவே இந்த பிறை பார்த்தல் என்னும் சர்ச்சை உலகளாவிய ரீதியில் இடம் பெறுவதை நாம் காணக் கூடியதாக உள்ளது. உலகளாவிய ரீதியில் என்றில்லாவிட்டாலும் முஸ்லிம்கள வாழும் சிறுபான்மை நாட்டில் இவை ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது எனலாம்

உண்மையில் இந்த பிரச்சினைக்கான தீர்வு என்ன ? ஏன் இந்த முரண்பாடு தொடர்கின்றது ? என்பனவற்றை கட்டாயம் ஆராய வேண்டிய ஒரு தேவை உள்ளது .

பொதுவாக தலைபிறை பார்த்தல் தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் உலகில் நிலவுகின்றன.

இந்த வகையில் ஒரு சாரார் சர்வதேச ரீதியாக ஏதாவது ஒரு இடத்தில்  அல்லது நாட்டில் பிறை தென்பட்டால் அதுவே முழு உலகத்துக்கும் போதுமானது என்றும்.

இன்னோர் சாரார் இல்லை பிறை ஒவ்வொரு இடத்திலும் அல்லது நாட்டிலும் பிறை காணப்படவேண்டும் என்றும்,

மற்றுமொரு சாரார் பிறை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை அதை நட்சத்திர கணக்கின்படி (இல்முல் புல்கியா )தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் ,பலரும்  அவர்களுக்கு தேவையான தத்ததமது  சான்றுகளை முன்வைக்கின்றனர்.

இஸ்லாம் பிறையை பார்த்து அனுஷ்டிக்குமாறு கூறுகின்றது எனவே  எப்படியாயினம் நோன்பு மற்றும் இரு பெருநாட்களை தீர்மானிக்கும்  போது  கட்டாயம் பிறை  பார்க்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது .எனவே இன்றைய யுகத்தில் எதோ ஒரு அமைப்பில் நாம் பிறையை காணலாம் அதற்கு வேற்றுக் கண்தான் வேண்டும் என்பதில்லை .கருவிகள் மூலமும் பார்கலாம் .ஒருவர் கண் கண்ணாடி மூலம் பத்திரிகை வாசித்தால் நாம் அவர் வேற்றுக் கண்ணால் பத்திரிகை வாசிக்கவில்லை என்று கூறுவதில்லை .அதே போன்று ஒருவர் எதோ ஒரு கருவி மூலம் பிறை பார்த்தல் அதை அப்படிதான் எடுக்க வேண்டும் 
.
எனினும் நமது கால ,தேச ,சூழலுக்கு ஏற்ப சிலவேளை இந்த பிறை நமது பகுதிகளில் கண்களுக்கு தென்படாமல் போகலாம் அதற்கான தீர்வுதான் நபி ஸல் கூறியது "நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கொள்ளுங்கள்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் எனவே பிறை ஒரு பிரச்சினை இல்லை

மேலும் கூறினார்கள் "ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.இந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படையில் பிறை கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படி சிக்கல் இருந்தால் எப்பெடி மேக மூட்டம் கால நிலை மற்றும் வேறு வானியல் காரணிகள் இருந்தால் நபி ஸல் கூறினார்கள் “ உங்களுக்கு மேகம் பிறையை மறைத்தால் சஹ்பான் முப்பதை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் “என்பதாக எனவே பிரச்சினைக்கான தீர்வையும் நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்  எனவே இங்கு பாரிய சிக்கல் ஏற்படாது ஆனால் நாமாக பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது .


பிறை பார்ப்பதை நிறுவனமயப்படுத்துதலின் அவசியம் 

இது இவ்வாறு இருக்க பிறை பார்க்க வேண்டும் என்பதற்காகசந்திக்கு சந்தி ஊருக்கு ஊர் என்ற அடிப்படையில் பிறை கண்டு அதை யாரும் அனுஸ்டிக்க முடியாது. முஸ்லிம் சமூகம் நிறுவனமயமானதால்  அது முறைமைபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சமூக விவகாரங்களில் பிறை தொடர்பாக ஒரு தீர்மானத்தைப் பெறமுடியும்.இந்த அடிப்படையில் பிறை பார்த்தல் என்பது இஸ்லாத்தில் மிகப் பிரதானமானது என்பதால் அந்தப் பிறையை கண்டு உண்மை படுத்துதல் என்பது ஒரு முக்கியமான விடயமாக உள்ளது.கால தேச வார்தமானங்களுக்கு ஏற்ப பிறை முரண்படாத  இடங்களில் வேறுபட்ட பிறைகள் அனுஸ்டிப்பது மார்க்கத்துக்கு முரண்பாடானது

எனவே இந்த பிறை விவகாரத்தை யாரெல்லாம் கையாள வேண்டும்.  இதனை யார் தீர்மானித்து  எப்படி முறைமைபடுத்த வேண்டும் என்றால் அதற்கு இஸ்லாமிய வழியில் நின்று நாம் விடைகாண வேண்டிய தேவை உள்ளது.

யார் இந்த தலைப் பிறையை பார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என்றால் மூமினான எவரும் பார்க்கலாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட உலக குடிமகன் எவனுக்கும் இந்த உரிமை உண்டு. இஸ்லாம் அதற்க்கு எந்த விதி முறையையும் வைக்கவில்லை. அல்லாஹ்வையும்  அவனுடைய தூதரையும் உண்மையாக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய கடமைகளை சரி வர நிறைவேற்றும்  எவரும் பிறை கண்டு அதனை பகிரங்கப்படுத்தலாம் 
.
இதற்க்கு ஆதாரமாக ஒரு முறை கிராமப்புற  அரபி  நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறையை கண்டுவிட்டேன்    எனக் கூறுகின்றார் . அதற்கு  நபி (ஸல்) அவர்கள் நீ அல்லாஹ்வை தவிர வேறு யாரும் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றீரா எனக் கேட்க அதற்க்கு அவர்  ஆம் என பதில் கூறுகின்றார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் நீங்கள்  முஹம்மத் அல்லஹ்வின் தூதர் என விசுவாசம் கொள்கின்றீரா ?  எனக் கேட்க அதற்கும் அவர் ஆம் என கூற நபி (ஸல்) அவர்கள் பிலாலை அழைத்து நாளை மக்களை நோன்பு நோக்கச் செய்யுமாறு கூறுகின்றனர் " என்ற இந்த சம்பவம் அப்துல்லாஹ் இப்னு முனீர் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிக்கும் நபி மொழிகள் பத்ருல் முனீர் என்ற நூலில் பதிவு செய்யப்செய்யபட்டுள்ளது.இந்த செய்தி பலயீனமான ஒன்றாக சில இமாம்களால் கணிக்கப்பட்டாலும் இதே செய்தி இரண்டு அரபிகள் பிறை கண்டு நப ஸல் அவர்களிடம்  கூற நபி ஸல் அவர்கள் நோன்பை பிரகடனப் படுத்தினார்கள் என்றுவரும் ஆதார பூர்வமான செய்தி இருப்பதால் எதோ ஒருவருக்குதான் பிறை காண  முடிந்தது என்றாலும் அதை உண்மை படுத்தி முறைப் படுத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் தலைமைகளுக்கு உண்டு

அதாவது “மக்கள் ரமளானில் கடைசி தினத்தில் பிறை தொடர்பாக முரண் பட்டனர் அவ்வேளை இரண்டு அரபிகள் நபியிடம் வந்தனர நேற்றைய இரவில் பிறை கண்டதாக அல்லாஹ்வை கொண்டு சாட்சி பகர்ந்தனர் உடனே நபி ஸல் அவர்கள் நோன்பை விட கட்டளை இட்டார்கள் .அபூதாவூத் இச் செய்தி பல நூற்களில் வந்துள்ள படியால் இதை இமாம் அல்பானி அவர்களும் சஹீகாக ஆக்கி உள்ளனர்

எனவே இங்கு பிறை தொடர்பாக பிரச்சினைபட்டார்கள் என்றுதான் வருகின்றது .எனவே பிறை என்பது ஒரு நீண்ட கால பிரச்சினையாக இருந்து வந்துள்ளது எனபது இதன் மூலம் புலனாகின்றது

மூமினின் சாட்சி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால் அந்த மூமினை நாம் கட்டாயம் விசுவாசிக்க வேண்டும் .அவன் சரியாக சொல்கின்றான அல்லது பிழையாக சொல்கின்றான என்பதை நாம் வேறு பல நபர்கள், அல்லது சாட்சிகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.இது பிறைக்கு மட்டுமல்ல குற்றம் தண்டனை தொடர்பான எல்லா விடயங்களுக்கும் பொருந்தும்

இதைதான் மேலே கூறப்பட்ட நபி மொழி எமக்கு எடுத்துக் காட்டுகின்றது இரண்டு அரபிகள்  நபி ஸல் அவர்களிடம் வந்து பிறை கண்ட விடயத்தை சொல்கின்றார் நபி ஸல் அவர்கள் சமூகத்தின் தலைவர் என்பதால் அவர் அதை தானாக சமூகத்துக்கு சொல்லவில்லை .சமூகத்தின் தலைவரான நபி (ஸல்) அவர்களே சமூகத்துக்கு எடுத்துச் சொல்கின்றனர் இதுதான் சமூக தலமைத்துவ முன்மாதிரி .இப்படிதான்  முஸ்லிம் சமூகத்துக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் .

தனி மனிதனை ஏற்றுக் கொள்வதில் நாம் இஸ்லாத்தின் அடிப்படையில் பார்த்தால் அது நியாயமானதுதான் ஏனனில் இதுதான் இஸ்லாமிய சட்டம் என்றிருந்தால் அதைதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், இன்று எப்படி  நாம் ஒரு நபி மொழியை பல மனிதர்கள் அறிவித்துள்ளனர் என்று ஏற்று அதன்படி அமல் செய்கின்றோமோ அதே போல் சில மூமினான மனிதர்கள் சொல்லும் சாட்சியை வைத்து நாம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று பிறை கண்டுள்ளனர் என்று சாட்சி கூறும் மனிதர்களை நாம் கண்ணூடாக கூட காணலாம். ஆனால்  ஹதீஸ் அறிவித்தவர்கள் தொடர்பாக நாம் கண்ணூடாகக் கூட காணவில்லை. இதுதான் ஒரு மூமினின் விசுவாசம் எனவே பிறை பார்க்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டால் அதனை போதிய சான்றுகளை  கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சாட்சிகளின் நிபந்தனை என்னவென்றால்  அவன் மூமினாக இருக்க வேண்டும் ,இதுதான் நிபந்தனை  , இதைதான் மேற் கூறிய நபி மொழி எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.  எத்தனை  பேர் பிறை பார்க்க வேண்டும் என்றால் அப்படி இஸ்லாம் எதுவும் சொல்லவில்லை. குழுவாக பிறை பார்க்க வேண்டும் என்பதில்லை .அப்படி குழுவாக தலை பிறை பார்க்கக் கூடிய சூழல் கூட இல்லை .எனவே பிறை பார்த்தல் தனிநபரில் இருந்து ஆரம்பமாகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனினும் இந்த பிறை பார்த்தலை ஒழுங்கு படுத்தும் தேவை இருப்பதற்கு காரணம் இல்லை என்று கூற முடியாது.  ஏனனில் இன்று பிறை பார்ப்பதில் சமூக முரண்பாடுகள் பல உண்டு அதற்க்கு அடிப்படை காரணம் சமூகத்தில் இஸ்லாமிய கொள்கை குழுக்கள் பல இருப்பதும் . இந்த அமைப்புக்கள் சிலவேளை தங்கள் கொள்கைகளை நிலை நாட்ட இந்த பிறை விவகாரத்தை ஒருதலைபட்சமாக எடுத்துக் கொள்வர் என்ற ஓர் அச்சப்பாடுமாகும். இது ஒருவகையில் இன்றைய சூழலில் நியாமானதுதான் 
.
ஏனனில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கணப்பட்ட தனிநபர் நம்பிக்கை இன்றில்லை. அப்படி இருக்க வேண்டும் என்று இன்றைய சூழலில் எதிர்பார்க்கவும்  முடியாது.அதே வேளை இன்று பிறை பார்த்தல் தொடர்பாக காணப்படும் சமூக முரண்பாடுகளை நீக்க தனிநபர் சாட்சி ஏற்றுக் கொள்வதில் சில பிரச்சினைகள் உண்டு அப்படியானால் கட்டாயம்  அதற்கான ஒரு முறைமை இருக்க வேண்டும் .

இஸ்லாம் சமூகமயமானது அது தலைமைத்துவ  பண்புகளை   கொண்ட ஒரு சமூகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது  . எனவே தலை பிறை பார்க்கப்பட்டது என்று சொல்லப்பட்டால் அதற்கான ஒரு முறைமை மூலம் சமூகத்துக்கு எடுத்துச்  செல்லப்பட வேண்டும். எனவே யார் அந்தப் பொறுப்பை  ஏற்றுக் கொண்டுள்ளனரோ  அவர் அதனை பொறுப்பாளியாக இருக்க வேண்டும்.

உதாரணமாக இஸ்லாமிய நாடுகளில் அந்தந்த அரசாங்கங்கள் பிறை தொடர்பான பொறுப்பில் உள்ளதால் மக்கள் அது தொடர்பாக அலட்டிக் கொள்வதில்லை. அதன் முறைமை சரியாக இடம் பெறுகின்றது. ஏனென்றால் இங்கு ஒரு முறைமை உண்டு. இந்த முறைமை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அந்தந்த நாடுகளில் இந்த பிரச்சினை முறைமைப்படுத்தப்பட்டு கையாளப்படுகின்றது.

 ஆனால் இந்த விடயம்    நாம் ஏற்கனவே சொன்னது போல் முஸ்லிம்கள் வாழும் சிறுபான்மை நாடுகளில் தான் அதிகம் பிரச்சினையாக உள்ளது. ஏனனில் சரியான முறைமை இல்லாமை மற்றும் சமூகமயமாக இந்தப்பிறை பார்த்தல் கையாளப்படாமை போன்ற காரணங்கள் சில சிக்கல்களை தோற்றுவிக்கின்றது . இங்கு ஒரு முறைமை இருக்குமானால் அந்த முறைமை சமூகத்தில் பின்பற்றப்படும். எனவே இஸ்லாமிய நாடுகள் அல்லாத சிறு பான்மை நாடுகள் இந்த முறைமை சிறப்பாக ஏற்படுத்துவதால் நல்ல செயற் திட்டத்தை ஏற்படுத்தலாம் .இல்லாவிடால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல குளறுபடிச் சம்பவங்கள் ஏற்ற்பட வாய்ப்புண்டு.

தேசிய பிறையா அல்லது சர்வதேச பிறையா ?

அடுத்ததாக பிறை என்பது தேசிய ரீதியாக காணப்பட வேண்டுமா ? அல்லது சர்வதேச ரீதியாக காணப்பட வேண்டுமா ?என்ற கேள்விக்கு முதலில் விடை  காணப்படவேண்டும்.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் , பிறை என்பது ஒரு தனிப்பட்ட பொருள் அல்ல. அது ஒரு முழுமையான பொருளின் ஆரம்ப வெளிபாடு . அதாவது சந்திரன் என்ற படைப்பின் ஆரம்ப வெளிப்பாடு.  அது பிறையாக தோன்றக் காரணம் சூரியன் பூமி என்ற கோள்களின் சுழற்சியில் அது பின்னிப் பிணைந்துள்ளது.  அந்தப் பிறை  வெளிப்பாடு ஆரம்பிக்கும் போது நாம் அதை பிறை என்கின்றோம். முழுமையான  சந்திரனை அமாவாசை என்கின்றோம். எனவே பிறை  என்பது ஓர் தனிப்பட்ட பொருள் அல்ல என்பதை  முதலில் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். பிறை என்பது தோன்றும் பொருள் அல்ல. அது உலகில் எதோ ஒரு மூலையில் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் பொருள். சில இடங்களில் தோன்றிக் கொண்டிருக்கும் .சில இடங்களில் மறைந்து கொண்டிருக்கும் .எனவே தோன்றிக் கொண்டிருப்பதை பிறை என்கின்றோம். மறைந்து கொண்டிருப்பதை அமாவாசை என்கின்றோம் .அரை வாசியை சந்திரன் என்கின்றோம் பூரண தோற்றத்தை முழுமதி அல்லது நிலா என்கின்றோம். இதுதான் உலக பிறை தோற்றத்தின் சாராம்சம். ஆனால் பிறை என்றதனிப்பட்ட வடிவம் அல்லாஹ்வால் படைக்கப்படவில்லை அல்லா கூறும் போது சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன”  (55:5) மேலும்பல ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். (10:5)போன்ற அல்குரானிய வசனங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

(இதனால்தான் சில நாடுகளில் இந்த சூரிய சந்திர தோற்றங்கள் முற்று முழுதாக வேறுபட்ட கோணத்தில் உதிப்பதும் மறைவதும் சில இடங்களில் மனிதன் கண்ணால் சூரியனை மற்றும் சந்திரனை மாதக் கணக்கில்காண  முடியாத சூழல் இருப்பதை பார்கின்றோம் எனவே இது இயற்கையின் வழிமுறை என்பதை நான் மேலே கூறிய வியாக்கியானத்துக்கு விளக்கமாக தருகின்றேன் )

எனவே இந்த பிறையை  வானில் நமது வேற்றுக் கண்களுக்கு தோற்றமளிப்பதற்கு முன்னரே  நமது தொலை நோக்கியால் பார்க்க முடியும். அதை நாம் மைக்ரோ  வடிவத்தில் காணக் கூடியதா இருக்கும். அதை பிறை என்று கருதி நாம்  சமூகத்துக்கு   அறிவிக்க  தொடங்கினால் பிறை உலகில் உண்மையாக நமது வெற்றுக் கண்களுக்கு தோன்றுவதற்கு முன்னரே அறிவிக்கலாம். ஆனால் அது நாட் கணக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே பிறையை அப்படி கருவி கொண்டு பார்க்க முடியாது .அந்த தேவையும் மார்க்கத்தில் இல்லை. பிறை என்பது ஓர் குழந்தை போன்ற வளர்ச்சியை உடையது. எப்படி கருவில் குழந்தை உருவாகின்றதோ அதே போன்றுதான் இந்த செயன்முறையும்.எனவே அது தோன்றும் போது மட்டுமே நாம் காண முயற்சிக்க வேண்டும் .

உண்மையில் இந்தப் தலைப்பிறை    தொடர்பான  பிரச்சினை இன்று நேற்று உருவாகவில்லை. இது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே உருவாகி விட்டது. இதைதான் பின்வரும் விடயம் எடுத்துக் காட்டுகின்றது.

அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் "பத்னு நக்லா' எனுமிடத்தில் தங்கியிருந்த போது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை'' என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை'' என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களைச் சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது பிறை' என்றனர். வேறு சிலர் "அது இரண்டாவது பிறை' என்று கூறினர்'' என்று சொன்னோம். அதற்கு  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு, "இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்' என்று பதிலளித்தோம். அப்போது, "பார்ப்பதற்காகவே  பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். நூல் : முஸ்லிம் (1984)

எனவே பிறை தொடர்பான தோற்றப்பாட்டில் உள்ள சிக்கல் என்பது புலக் காட்சியோடு சம்மந்தப்பட்டது அதைதான் மேலே உள்ள நபி மொழியும் எமக்கு சொல்லிக் காட்டுகின்றது. எனவே பிறை என்பது உலகில் ஒன்றல்ல அது நாட்டுக்கு நாடு வேறுபட்ட தோற்றக் காட்சியோடு சம்மந்தப்பட்டது. எப்படி சூரியன் வேறுபட்டு நமது ஐந்து வேளை தொழுகை வித்தியாசப் படுகின்றதோ அதே போன்றுதான் சந்திரனின் தோற்றப்பாட்டின் நிலை இந்த பெருநாளையும் தீர்மானிக்கின்றது  எனவே  இது ஒரு பிரச்சினை இல்லை .மார்க்கத்தை விளங்காத பலர் இதை ஓர் பிரச்சினையாக ஆக்கிக் கொள்கின்றனர்.

அதே நேரம் ஒரே ஒரு ஒரு பிறைதான் உலகில் பார்க்கப்பட வேண்டும் எனக் கூறுவோர் பின்வரும் விடயத்தை அவதானிக்க வேண்டும். அதாவது இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் உலக அரங்கில் ஒன்றாக இருக்க வேண்டுமா ?இதற்க்கு முதல் விடை கண்டால் எம்மால் தெளிவை பெற்றுக் கொள்ளலாம்

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பொதுவாக நேரம் காலம் என்பவற்றோடு தொடர்புபட்டது. பொதுவாக எல்லா வணக்கங்களும் அப்படிதான். உதாரணமாக தொழுகை எடுத்துக் கொண்டால் மக்ரிப் என்ற தொழுகை மக்ரிப் என்ற சூரியன் மறையும் நேரத்தை மையப்படுத்திய தொழுகை என்பதால் சூரியன் மறையும் நேரம் மக்ரிப் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இவ்வாறு  எல்லாத் தொழுகைகளையும் நாம் பார்தால் அதை அறிந்து கொள்ளலாம் .இங்கு ஒரு நாட்டில் மக்ரிப் தொழுகை தொழும் நேரத்தில் வேறு ஒரு நாட்டில் அசர் தொழுவர் இன்னோர் நாடடில் சுபஹ் தொழுவர் இன்னோர் நாட்டில் இசா தொழுவர் இந்த 5 நேரங்களும் எல்லா நாடுகளிலும் உலகில் ஒரே நேரத்தில் நிறை வேற்றப்படும் வாணக்காமாக இருக்க வாய்ப்புண்டு. எனவே இங்கு இஸ்லாமிய வணக்கங்களுக்கும்  நேரம் என்பது ஒருமித்து இருக்க வேண்டும் என்பது சாத்தியம் இல்லை இஸ்லாம் அப்படி எதிர்பார்க்கவும் இல்லை.உலக சுழற்சியில் அவ்வாறு இருக்கவும் முடியாது ,

இப்படி இருக்கும் சூழலில் பெருநாள் அல்லது நோன்பு ஒரே நேரத்தில் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது மடமைத்தனம் என்றே புரிந்து கொள்ள வேண்டும் .பெருநாள் என்ற தொழுகை வழமையான  தொழுகை எப்படி வேறுபட்ட நேரங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றதோ அதே போன்றுதான் பெருநாட தொழுகையும் .அதுவும் வேறு வேறு நாட்களில் அனுஸ்டிக்கப்படலாம் சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன (55:5)ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான்.” (10:5) .போன்ற வசனங்களும் அதைதான் சொல்கின்றன.

எனவே பிறை தொடரான பிரச்சினை என்பது நாடடுக்கு நாடு வேறுபாடானது .அபபடி இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம்  இல்லை .ஏனென்றால் பிறை என்றால் பிறை  மட்டுமல்ல அது சூரியனோடும் சம்மந்தப்பட்டது .எனவே உலகில் எல்லா நாடுகளிலும் பிறை ஒன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது முட்டாள்தனமானது .

அப்படி ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன் ? என்பதுதான் புரியவில்லை இஸ்லாமிய அடிப்படையில் இதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏன் தெரியுமா? இஸ்லாமிய வணக்கங்கள் உலகம் பூராவும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தவறானது நாம் முன்னர் கூறியது போல் இஸ்லாமிய வணக்கங்கள் அப்படி ஒருமித்த நேரத்தில் உலகில் அனுஸ்டிக்க முடியாது .காரணம் நாம் சுபஹ் தொழுகையில் ஈடுபடும்போது  வேறு பல நாடுகளில் மக்கள் பகல் வேளையில்  இருக்கின்றனர் .நாம் ஜும்மா  தினத்தில் ஹுத்பா  கேட்டுக் கொண்டு இருக்கும் போது  பலர் உலகில் பலர் தூங்கிக் கொண்டுள்ளனர் .எனவே ஒரு போதும் இஸ்லாமிய வணக்கங்கள் அல்லது நேரங்கள் ஒன்றுபட முடியாது என்னும் போது  பெருநாள் மட்டும் உலகில் ஓன்று பட முடியும் என எதிர் பார்ப்பது முட்டாள்தனமானது .எனவே நமக்கு என்ன நேரமோ அந்த வேளை என்ன வணக்கமோ அதை நாம் செய்தால் சரி

இதைதான் பிறை தொடர்பாக வரும் இந்த நபி மொழி தெளிவு படுத்துகின்றது. “ உம்மு பளுல் ரலி அவர்கள் ஒரு தேவைக்காக முஆவியாவிடம் அனுப்பப் பட்டார்கள் அதை பற்றி அவர்கள் கூறும் போது நான் சாம் தேசம் வந்து எனது தேவைகளை நிறைவேற்றி நான் சாம் இருக்கும் போதே பிறையையும் கண்டேன். அதை நாங்கள்  வெள்ளிக் கிழமை இரவு கண்டோம் பின்பு மதீனா நோக்கி மீண்டும் மாத இறுதியில் வந்தோம்  அப்போது என்னிடம் இப்னு அப்பாஸ் அவர்கள் பிறை தொடர்பாக கேட்டார்கள் எப்போது பிறை கண்டீர் எனக் கேட்டார்கள். வெள்ளிக் கிழமை இரவு கண்டேன் எனக் கூறினேன் நீ வெள்ளி இரவு கண்டீரா? எனக் கேட்டார் நான் ஆம் என்று கூறினேன் ,மக்களும் கண்டு நோன்பு நோற்றனர் நானும் முஆவியாவும் நோற்றார் என்று கூறினேன் அதற்க்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் எனினும் நாங்கள் சனி இரவுதான் பிறை கண்டோம் என்றும் நாங்கள் முப்பது நாட்டகள் முழுமை பெரும்வரை நோன்பு நோப்போம் என்று கூறினார் அதற்க்கு உம்மு பளுல் ரலி அவர்கள் உங்களுக்கு முஆவியா நோன்பு நோற்க பிறை கண்டது போதாதா ? என்று கேட்கவும் அதற்க்கு அவர்  இல்லை இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவினார்கள்  என்று கூறினார் (திர்மிதி) 693

இங்கு இரண்டுபேரும் ஒரே விடயத்தைத்தான் கூறுகின்றனர். ஒருவர் பிறை கண்ட விடயத்தை கூறுகின்றார் மற்றவர் நபி (ஸல்) அவர்களை ஆதாரம் காட்டி தான் பிறை கண்ட விடயத்தை நியாயப்படுத்துகின்றார். இங்குதான் நாம் அறிய வேண்டிய விடயம் உள்ளது .இரண்டு பெரும் ஒரே விடயத்தை பற்றி பேசினாலும் இருவரும் இரு தேசங்களில்  பிறை கண்ட விதத்தை வைத்துக் கொண்டு முரண்படுகின்றனர் .இங்கு இரண்டு பெரும் இன்றுள்ள தேசிய மற்றும் சர்வதேச பிறை விவகாரங்கள போன்றுதான் அன்றும் முரண்பட்டுக் கொண்டனர் ஆனால் என்ன முடிவு என்பது பெறப்படவில்லை. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால். இந்தப் பிரச்சினை இன்று நேற்று உருவாகவில்லை மாறாக இஸ்லாமிய தோற்றக் காலத்தில் இருந்தே உருவாகி விட்டது

ஆனால் நமக்கும் சஹாபாக்களுக்கும் உள்ள வேறுபாடு என்பது  நபி (ஸல்) அவர்களின் மீது உள்ள பற்று என்பதுதான். அதனால் அவர்கள் மேற் கூறிய சம்பவத்தில் இரு சாராரும்  விட்டுக் கொடுக்கவில்லை அதே வேளை அந்த இரண்டு பெரும் பிறை கண்ட தேசங்கள் என்பது ஒரே நேரத்தை கொண்டது. அதனால் அவர்கள் பிறை காண்பது என்ற விடயத்தை மட்டுமே அவர்கள் கருத்தில் கொண்டார்கள்.ஆனால் இன்றுள்ள பிரச்சினை அப்படிப்பட்டதல்ல. பிறை வேறுபட்ட தேசங்களில் வேறுபட்ட நாட்களில் காண்பதனால் ஏற்பட்ட பிரச்சினை எனவே அந்தப் பிரச்சினைக்கு இந்த விடயத்தை நாம்  முடிச்சிப்போட முடியாது ஆனால் பிறை சம்மந்தமாக எதோ ஒரு முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.

எனவே இவ்வாறான பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்பதை நாம் பார்க்கும் போது சர்வதேச ரீதியாக ஒரு போதும் இதனை ஒருமைபடுத்த முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் ஒரு உண்மை எமக்குப் புலப்படுகின்றது அதாவது ஒரு போதும் இந்த பிறை என்ற அம்சம் உலகளாவிய ரீதியில் ஓன்றுபட்டிருக்க வாய்ப்பில்லை .

மேலும் பிறை தொடர்பாக அதன் தோற்றப் பாட்டின் விஞ்ஜான ரீதியான விளக்கங்களுடன் பலர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளனர் அதன் மூலம் சர்வதேச ரீதியான பிறை ஒருமைபாடுகள் தொடர்பாகவும் பேசுகின்றனர் உண்மையில் அப்படி ஒரு உடன்பாடு ஒரே நேரத்தில் பிறைகாணும் சமூகங்களில் இருக்குமானால் அது வரவேற்கத் தக்கது. ஆனால் அது அவசிய நிபந்தனை அல்ல 
.
பிறை விவகாரத்தில் சர்வேதசமாஅல்லது உள்நாட்டுப் பிறையா ? என யாராவது கேட்டால் முதலில் உள்நாட்டுப் பிறைதான் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.காரணம் சர்வேதச ஒற்றுமைக்கும் சர்வேதேச பிறைக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த பிறை விவகாரத்தில்  எந்த ஒற்றுமையும் இல்லை. இஸ்லாம் அப்படி எதுவும் சொல்லவில்லை .சர்வதேச ரீதியாக முஸ்லிம்களுக்குஎதிராக எதுவும் வருமாக இருந்தால் அதனை நாம் சர்வேதேச ஒற்றுமை என்று கருதி ஏதாவது யோசிக்கலாம் இதைதான் நபி (ஸல்) அவர்களும் சொல்லியுள்ளனர் "யார் முஸ்லிம்கள் விடயத்தில் கவனம் முக்கியத்துவம் செலுத்தவில்லையோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் அல்லர் " என்ற அடிப்படையில் நாம் சிந்திக்கலாம். ஆனால் இஸ்லாமிய வணக்கங்கள் அடிப்படையில் அப்படி நாம் சிந்திக்க முடியாது இஸ்லாமிய வணக்கங்கள்கூட எதுவும் அப்படி இல்லை .ஹஜ் மட்டும் அது ஒரு இடம் என்பதால் சர்வதேசப் படுத்த முடிகின்றது காலம் என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் ஒற்றுமை படுத்தமுடியாது.


எனவே பிறை தொடர்பாக  பின்வரும் முடிவிற்கு  எம்மால் வர  முடியும்

1-பிறை என்பது இஸ்லாமிய காலம்காட்டும் ஒரு அம்சம் என்பதால் அது இடத்துக்கு இடம் தேசத்துக்கு தேசம் வேறுபட்டது

2- இஸ்லாமிய வணக்கங்கள் நேர அல்லது கால அடிப்படையில் ஓன்றுபட முடியாது

3-சர்வேதேச ரீதியா இந்த பிறை அணுகப்பட வேண்டும் என்பது மார்க்கத்தில் எந்த இடத்திலும் இல்லை

4-அப்படி சர்வதேச ரீதியாக இந்த உலகம் பிறை மூலம் ஒற்றுமைபட்டால் அதில் எந்த தவறும் இல்லை

 இந்த அடிப்படையில் மார்க்கத்தில் முன்மாதிரி இல்லாத ஆய்வுப் பக்கங்கள் நமது பார்வையை திருப்பி யாரும் இஸ்லாத்தில்பிரசினை ஏற்படுத்த தேவை இல்லை .அல்லாஹ்  ஏற்படுத்தி உள்ளவற்றை மட்டும் நாம் நமது சக்திக்கும் ஆற்றலுக்கும் மட்டுப்படுத்தி பின்பற்றுவோம் எனவே என்னை பொறுத்தவரையில் இது இஜ்திகாதுக்கு உட்பட்டது. எனவே  சர்வதேச பிறை அசாத்தியம் எனக் கருதி தேசிய பிறை முறைமையை  முற்படுத்தி பிரச்சினைகளை குறைப்போம் சர்வதேச ரீதியாக ஒற்றுமைபடும் காலம் வரும் போது அதை நாம் நடை முறை படுத்துவது பற்றி  சிந்திப்போம் அல்லாஹ் மிகவும் அறிந்தவன் 

1 comment:

  1. அருமையான ஓர் அழகிய முயற்சி , சில விடயங்களை கற்றுக் கொண்டேன்.

    ReplyDelete