தொழுகையின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும் தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே!) கூறுவீராக அல்குர்ஆன் 14:31 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர்ஆன் 4:103 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21 'இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 116 'நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859 இதைப் போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுகின்றன. தொழுவதால் ஏற்படும் நன்மைகள் )முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல்குர்ஆன் 29:45 'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்' என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071 'ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 394 தொழாததால் ஏற்படும் தீங்குகள் கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் 'உங்களை நரகத்தில் சேர்த்தது எது?' என்று விசாரிப்பார்கள். 'நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை' எனக் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:41-43 ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, 'அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்' என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: ஸமுரா (ரலி) நூல்: புகாரீ 1143 இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமையான தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர். தொழுகைக்கு நபியே முன் மாதிரி ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசல் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். நபிகளார் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631 இந்த நபி மொழியின் படி நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம். உளூவின் சட்டங்கள் உளூவின் அவசியம் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6 'உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330 தண்ணீர் உளூச் செய்வதற்குத் தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் உளூ செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன. ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம்; குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை. கடல் நீர் கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது. 'கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது' என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர். நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது;அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: இப்னுமாஜா 382 எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம். பயன்படுத்திய தண்ணீர் 'சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடு'ம் என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹப்களிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்து தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர். உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160 உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். (புகாரீ 192) நபி அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டுமின்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன. 'உங்களில் ஒருவர் தூக்கத்திருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரில் கையை விடுவதற்கு முன் கையைக் கழுவிக் கொள்ளட்டும்; ஏனெனில் அவரது கை எங்கெங்கே பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 162 படக் கூடாத இடத்தில் கை பட்டிருக்கும் என்பதற்காகவே கையை நபி (ஸல்) அவர்கள் கழுவச் சொல்கின்றார்கள். இவ்வாறு கழுவி விட்டால் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீர் எடுத்து உளூச் செய்யலாம் என்று தெளிவான அனுமதியை அளித்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் தெளிவான அனுமதியளித்த பின் அதை நிராகரிக்க எந்தக் காரணத்தை யார் கூறினாலும் ஏற்கத் தேவையில்லை. மீதம் வைத்த தண்ணீர் பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும். 'கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ 263 கடமையான குளிப்பும் உளூவைப் போலவே மார்க்க அடிப்படையிலான தூய்மைப்படுத்துதல் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் எடுத்துக் குளிக்கும் போது இருவர் மேனியில் பட்ட தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் விழாமல் இருக்காது. தண்ணீரை எடுப்பதற்காகக் கையைக் கொண்டு செல்லும் போது கையிருந்து பாத்திரத்தில் தண்ணீர் விழும். அப்படியிருந்தும் அதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே உளூச் செய்யும் போதும், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் ஒருவர் மீதம் வைத்த தண்ணீரை மற்றவர் பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பதை இதிருந்து விளங்கலாம். வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர் மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும். அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார். 'என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?' என்று கேட்டார். நான் ஆம் என்றேன். 'இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்' என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார். அறிவிப்பவர்: கப்ஷா நூல்கள்: திர்மிதி 85, நஸயீ 67, அபூதாவூத் 68 பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும், அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் என்பதும் இதிருந்து தெரிகின்றது. மேலும் 'இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்' என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதை விளக்குகின்றது. மனிதர்களுடன் அண்டி வாழும் பிராணிகளில் நாயைத் தவிர மற்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யலாம். 'நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவ வேண்டும்' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரீ 172 சூடாக்கப்பட்ட தண்ணீர் சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர். சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபி (ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய் வரும் என்று நபி (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப்பட்டவையாகும். காத் பின் இஸ்மாயீல், வஹப் பின் வஹப், ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர். எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், நெருப்பால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை. வீட்டில் உளூச் செய்தல் வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும். 'ஒருவர் தமது வீட்டிலும், கடை வீதியிலும் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை அளிக்காத வரையில் இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!' என்று வானவர்கள் கூறுகின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 477, முஸ்லிம் 1059 பள்ளிவாசல் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல் வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, பள்ளிவாசன் சார்பில் ஏற்பாடு செய்வது குற்றமில்லை. தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள் அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கல் பாத்திரம் ஒன்று தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர். நபி (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயவில்லை. எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர். எஞ்சிய அனைவரும் உளூச் செய்தனர்' என்று அனஸ் (ரலி) கூறினார்கள். '(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?' என்று அவர்களிடம் நான் கேட்டேன். 'எண்பது பேர்கள்' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஹுமைத் நூல்: புகாரீ 3575 உளூச் செய்யும் முறை நிய்யத் எனும் எண்ணம் ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது. ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார். உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார். இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார். உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார். எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது. அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530 நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை. ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை. நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்' என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள். பல் துலக்குதல் உளூச் செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும். பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1233 பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் 'உளூச் செய்தார்கள்' என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் 'பல் துலக்கினார்கள்' என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது. மேலும் பல் துலக்குதல் நபி (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 888 பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்' எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: நஸயீ 5, அஹ்மத் 23072 'என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் 9548 பல் துலக்கும் குச்சி குறிப்பிட்ட மரத்தின் குச்சியால் பல் துலக்குவது தான் சுன்னத் என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது. இதை மிஸ்வாக்' குச்சி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். மிஸ்வாக்' என்ற சொல்லுக்கு பல் துலக்கும் சாதனம்' என்பது தான் பொருள். குறிப்பிட்ட மரத்தின் குச்சி என்று இதற்கு அர்த்தம் கிடையாது. பல் துலக்க விரலைப் பயன்படுத்தினாலும், பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும் அனைத்துமே மிஸ்வாக்கில் அடங்கும். அது போல் எந்த மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினாலும் அதுவும் மிஸ்வாக்கில் அடங்கும். அனைத்துமே இதில் சமமானவை தான். பல் துலக்குதல் தான் நபிவழியே தவிர குறிப்பிட்ட குச்சியாகத் தான் இருக்க வேண்டும் என்பது நபிவழியல்ல! இந்தக் குச்சியால் தான் பல் துலக்க வேண்டும் என்று சிலர் வயுறுத்துவதால் இதை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். பல் துலக்கிய பின்னர் உளூச் செய்ய வேண்டும். உளூச் செய்யும் போது செய்ய வேண்டிய காரியங்களை வரிசையாக உரிய ஆதாரங்களுடன் இனி அறிந்து கொள்வோம். அல்லாஹ்வின் பெயர் கூறுதல் உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும். நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?' என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, 'அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்' என்று கூறினார்கள். அவர்களின் விரல்களுக்கு இடையிருந்து தண்ணீர் வெளியேறியதை நான் பார்த்தேன். கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள். இவ்வாறு அனஸ் (ரலி) கூறினார்கள். 'மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?' என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'சுமார் எழுபது நபர்கள்' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: கதாதா நூல்: நஸயீ 77 முன் கைகளைக் கழுவுதல் உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். ... 'நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி) நூல்: நஸயீ 147 வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, 'தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. நூல்: புகாரீ 160, 164 வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்... (பின்னர்) 'இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்' எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: புகாரீ 140 ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, 'தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்து, மூக்கையும் சீந்தினார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. நூல்: புகாரீ 160, 164 அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் 'இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்'என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்து கைர் நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696 முகத்தைக் கழுவுதல் இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இரு கைகளால் கழுவுதல் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள். அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: புகாரீ 140 ஒரு கையால் கழுவுதல் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்: புகாரீ 186 தாடியைக் கோதிக் கழுவுதல் தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத் 24779 இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல் முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160 முகம், கை, கால்களைச் சிறப்பாகக் கழுவுதல் முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை. 'உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம், கை, கால்கள் வெண்மையானவர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். யார் தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 136, முஸ்லிம் 362 எனவே முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும். தலைக்கு மஸஹ் செய்தல் இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346 இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும். தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை. எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்? தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, கையை (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்: புகாரீ 186 நபி (ஸல்) அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்: நஸயீ 98 காதுகளுக்கு மஸஹ் செய்தல் தலைக்கு மஸஹ் செய்யும் போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும்,கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: நஸயீ 101 பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா? தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது. இரண்டு கால்களையும் கழுவுதல் இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள். அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: புகாரீ 140 கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160 உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) 'உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்' என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார்கள். அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத் நூல்: புகாரீ 165 எத்தனை தடவை கழுவ வேண்டும்? தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி). நூல்: புகாரீ 157 நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்: புகாரீ 158 நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160 எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும், மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம். ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346 மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, 'இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்' எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி) நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397 வரிசையாகச் செய்தல் மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம். காலுறைகள் மீது மஸஹ் செய்தல் உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம். காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும். நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா (ரலி) நூல்கள்: புகாரீ 182, முஸ்லிம் 404 பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா? பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் சொல்யிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான். காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள் ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன. காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், 'அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்' என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: புகாரீ 206, முஸ்லிம் 408 காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிருந்து அறியலாம். கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது. காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இவ்விரண்டையும் குறிக்கும். ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம். சலுகையின் கால அளவு உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர், காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது. தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதும். 24மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும். பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை அணிய வேண்டும். காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், 'அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்' என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். 'பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்' என்று அலீ (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஷுரைஹ் நூல்: முஸ்லிம் 414 குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது. நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396 மேற்புறத்தில் மஸஹ் செய்தல் நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: அபூதாவூத் 140, அஹ்மத் 699 எவ்வாறு மஸஹ் செய்வது? நபி (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை. எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்;காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபி (ஸல்) வழியாக குறிப்பிட்ட அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்' என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது. இது தவிர காலுறைகள் தோல் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை. தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல் காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி) நூல்: புகாரீ 205 தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர். அறிவிப்பவர்: பிலால் (ரலி) நூல்: முஸ்லிம் 413 முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், கிமார்' என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி - அதாவது முக்காட்டையும் குறிக்கும். பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 'குமுரிஹின்ன' என்பது கிமார்' என்பதன் பன்மையாகும். புகாரீ 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார்' என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை மற்றும் தலைத் துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர். பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய சலுகையோ அது போலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும் பொதுவானது தான். மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரீ, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர். எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக் கிடையாது. உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது நபிவழியாகும். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன். அல்லது அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன். உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 345 ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை ஷாபி, ஹனபி மத்ஹப் கிதாபுகளிலும், தப்லீக் ஜமாஅத்தினரின் வெளியீடுகளிலும் ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் ஓத வேண்டிய துஆக்கள் என்று சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சிலர் இதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது எந்த துஆவையும் ஓதியதில்லை. எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின் அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) கற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத் ஆகும். பித்அத்கள் நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும். இரண்டு ரக்அத்கள் தொழுதல் உளூச் செய்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அதிகம் நன்மையைப் பெற்றுத் தருவதாகும். 'எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி) நூல்: புகாரீ 160 ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபி (ஸல்) அவர்கள், 'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன்'என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்'என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 1149, முஸ்லிம் 4497 ஒரு உளூவில் பல தொழுகைகளைத் தொழுதல் ஒரு தடவை உளூச் செய்த பின் அந்த உளூ நீங்காத வரை எத்தனை தொழுகைகளையும் தொழலாம். ஒவ்வொரு தொழுகை நேரம் வந்ததும் உளூச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 'நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூச் செய்வது வழக்கம்' என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.'அப்படியானால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?' என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'உளூ நீங்காத வரை ஒரு உளூவே எங்களுக்குப் போதுமானதாகும்' என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரீ 214 நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது ஒரு உளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது தமது காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். 'ஒரு நாளும் செய்யாத ஒன்றை இன்றைய தினம் செய்தீர்களே!' என்று உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உமரே! வேண்டுமென்று தான் அவ்வாறு செய்தேன்' என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: முஸ்லிம் 415 தயம்மும் சட்டங்கள் தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். 'பைதா' என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, '(உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். 'நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 334, முஸ்லிம் 550 தயம்மும் பற்றிய வசனம் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ளது. அதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள். அந்த வசனங்கள் வருமாறு: நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:43 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6 தயம்மும் செய்யும் முறை உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு அல்லது கைகளை உதறிவிட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவ வேண்டும். ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, 'எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, 'உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங் கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி,இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!' எனக் கூறினார்கள்' என்று தெரிவித்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) நூல்கள்: புகாரீ 338, முஸ்லிம் 552 ... நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளால் பூமியில் ஒரு அடி அடித்து, பின்னர் இரு கைகளையும் உதறிவிட்டு தமது வலது கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தமது இடது கரத்தால் வலது புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரு கைகளால் தமது முகத்தைத் தடவி விட்டு, 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாகும்'என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார் (ரலி) நூல்: புகாரீ 347 புகாரீ, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் 'ஒரு தடவை தான் தரையில் அடிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகளில் இரண்டு தடவை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை ஆதாரப்பூர்மானவை அல்ல. தயம்மும் செய்ய ஏற்றவை தயம்மும் செய்வது பற்றிக் கூறும் மேற்கண்ட இரு வசனங்களிலும் தூய்மையான மண்' என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மண்ணில் தான் தயம்மும் செய்ய வேண்டும். மண் என்பது அதன் அனைத்து வகைகளையும் குறிக்கும். களிமண், மணல், இறுகிய மண்ணாங்கட்டி, மண் சுவர் போன்ற அனைத்துமே மண்ணில் அடங்கும். 'நபி (ஸல்) அவர்கள் சுவற்றில் அடித்துத் தயம்மும் செய்தார்கள்' என்று புகாரீ 337வது ஹதீஸில் கூறப்படுகின்றது. மண் என்பது உதிரியாகக் கிடப்பவை மட்டும் அல்ல; ஒன்று சேர்த்து திரட்டப் பட்டவையும் மண்' என்பதில் அடங்கும் என இதிருந்து விளங்கலாம். குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல் தாங்க முடியாத குளிர் இருந்தாலும் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்யலாம். தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். 'அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?' என்று நபி (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். 'உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்' என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை. அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 283, அஹ்மத் 17144 தொழுது முடித்த பின் தண்ணீர் கிடைத்தால்... தயம்மும் செய்து தொழுத பின்னர் அந்தத் தொழுகையின் நேரம் முடிவதற்குள் அல்லது நேரம் முடிந்த பின் தண்ணீர் கிடைத்தால் அந்தத் தொழுகையை மீண்டும் தொழத் தேவையில்லை. தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:43 இவ்வசனத்தில் தண்ணீர் கிடைக்காதவர்கள் தயம்மும் செய்து தொழுமாறு கட்டளையிடுகிறானே தவிர தண்ணீர் கிடைத்து விட்டால் மீண்டும் தொழவேண்டும் என்று கட்டளையிடவில்லை. எனவே தொழுது முடிந்த பின்னர் தண்ணீர் கிடைத்தால் தொழுகையைத் திரும்பத் தொழத் தேவையில்லை. ஒரு தயம்முமில் பல தொழுகை நாம் தயம்மும் செய்து ஒரு தொழுகையைத் தொழுகின்றோம். பின்னர் அடுத்த தொழுகையின் நேரம் வருகின்றது. அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. உளூவை நீக்கும் காரியம் எதுவும் நம்மிடம் நிகழவில்லை. இந்த நிலையில் ஒரு தொழுகைக்குச் செய்த அதே தயம்மும் மூலம் அடுத்த தொழுகையையும் தொழலாமா? என்றால் இதிலும் இரண்டு கருத்துக்கள் உள்ளன. ஒரு தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகை தொழுவது தான் நபிவழி. மற்ற தொழுகைக்கு மீண்டும் தயம்மும் செய்ய வேண்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹஸன் பின் உமாரா என்பவர் வழியாக இது அறிவிக்கப்படுகின்றது. இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு முடிவெடுக்கக் கூடாது. ஒரு தடவை தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகையைத் தான் தொழ வேண்டும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லை. எனவே ஒரு உளூவைக் கொண்டு எத்தனை தொழுகைகளையும் தொழலாம் என்பது போல் உளூவின் மாற்றாக அமைந்துள்ள தயம்முமையும் கருதுவதே சரியானதாகும். ஒரு தயம்மும் மூலம் ஒரு தொழுகை தொழுத பின் அடுத்த தொழுகை நேரத்திலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் அந்தத் தொழுகையையும் அதே தயம்மும் மூலம் தொழலாம். உளூவை நீக்குபவை உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம். மலஜலம் கழித்தல் உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:43 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6 மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்பதையும், தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதையும், ஏற்கனவே செய்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் இவ்விரு வசனங்கள் கூறுகின்றன. சிறுநீர் கழிப்பது உளூவை நீக்கி விடும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்திக்கும் போது அறிய முடியும். 'நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும் உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும்' எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396 சிறுநீர் கழித்தலும் உளூவை நீக்கி விடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும் மலஜலம் கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும். 'ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த்' என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் 'அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?' என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி), 'சப்தத்துடனோ, அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்' என்று விளக்கமளித்தார்கள். நூல்: புகாரீ 135, 176 காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால்... சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும். 'தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்கள்: புகாரீ 137, முஸ்லிம் 540 சமைத்த உணவுகளை உண்பது உளூவை நீக்குமா? பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதால் உளூ நீங்காது என்பதில் மாறுபட்ட ஹதீஸ்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை உண்பதால் உளூ நீங்காது. சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்குமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்களைத் தரும் ஹதீஸ்கள் உள்ளன. 'நெருப்பு தீண்டியவற்றின் காரணமாக (சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் காரணமாக) உளூச் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்போர்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) நூல்: முஸ்லிம் 528 சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உளூச் செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறினாலும் இந்தச் சட்டம் நபி (ஸல்) அவர்களால் பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது. சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், உளூச் செய்யாமல் விட்டு விடுதல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே நபி (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப்படுத்தியதாகும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: நஸயீ 185, அபூதாவூத் 164 'சமைக்கப்பட்ட பொருட்களை உண்பதால் உளூச் செய்ய வேண்டும்' என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததையும், பின்னர் அது மாற்றப்பட்டு விட்டதையும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கலாம். எனவே சமைக்கப்பட்ட உணவை உண்பதால் உளூ நீங்காது. ஒட்டகத்தின் இறைச்சியை உண்பது உளூவை நீக்கும் எதைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்றாலும் ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிடுவது உளூவை நீக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்'என்று கூறினார்கள். 'ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?' என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்' என்று நபி (ஸல்) விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம் 539 மதீ' வெளியானால் உளூ நீங்கும் ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ' - இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல. மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகியவை உளூவை நீக்குவது போலவே இந்த மதீ' எனும் இச்சை நீர் வெளிப்படுவதும் உளூவை நீக்கும். அதிக அளவில் மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். 'அதற்காக உளூச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: புகாரீ 132, முஸ்லிம் 458 'ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 269வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா? வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே வாந்தி எடுத்தால் உளூ நீங்காது. இரத்தம் வெளியேறுதல் உளூச் செய்த பின்னர் உடலிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் எனக் கூறும் ஹதீஸ்கள் சில உள்ளன. அவையனைத்தும் பலவீனமானவையாகும். எனவே இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பதே சரியானதாகும். பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:43 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும்,தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6 இவ்விரு வசனங்களிலும் பெண்களைத் தீண்டினால் உளூ நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். இந்த வசனங்களில், 'பெண்களைத் தீண்டினால்' என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர். இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லாவிட்டால் முதல் சாராரின் கூற்றையே நாம் தேர்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நேரடிப் பொருளின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர். இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களைத் தீண்டினால்' என்பதற்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால்' என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது. 'நான் நபி (ஸல்) அவர்களுக்கும், கிப்லாவுக்கும் குறுக்கே படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ 519, முஸ்லிம் 796 நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழும் கேள்விக்கும் - இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் - ஆயிஷா (ரலி) விடையளித்துள்ளார்கள். 'அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது' என்பது தான் அந்த விடை! பார்க்க புகாரீ: 382, 513 வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யப் போவதை விரலால் குத்தினால் தான் அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கின்றது. இந்த ஹதீஸைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களை நாம் ஆராய்வோம். பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள். திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு என்ன பொருள் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் தான் இதற்குத் தீர்வாக முடியும். தமது மனைவியின் மேல் தற்செயலாகக் கைகள் பட்டன என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. 'கால்களை மடக்கிக் கொள்' என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் தமது மனைவியைத் தொட்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. எனவே மேற்கண்ட வசனத்தில் பெண்களைத் தீண்டினால்' என்பதற்கு, பெண்களைத் தொட்டால்'என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது. இந்த ஹதீஸைப் பார்த்த பிறகும் சிலர் புதுமையான விளக்கத்தைக் கூறி தங்களின் கருத்தை நியாயப்படுத்த முனைகின்றனர். ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நேரடியாகத் தொட்டார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவர்கள் மீது ஆடை இருந்திருக்கும்; அந்த ஆடையின் மேல் நபி (ஸல்) அவர்கள் குத்தியிருக்கலாம் அல்லவா? என்பது இவர்கள் தரும் புதுமையான விளக்கம். யாரும் கணவருடன் படுத்திருக்கும் போது முழுமையாக உடலை மறைத்துக் கொள்வதில்லை. மேலும் கால்களையும் மூடிக் கொண்டு படுப்பதில்லை. அப்படியே படுத்திருந்தாலும் தூக்கத்தில் ஆடைகள் விலகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அங்கே வெளிச்சமாக இருந்திருந்தால் ஆடையால் மூடப்பட்ட இடத்தைப் பார்த்து விரலால் குத்தினார்கள் என்று கருத முடியும். விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்ததால் காலில் ஆடை கிடக்கின்றதா?இல்லையா? என்று தேடிப் பார்த்து தமது விரலால் குத்தவில்லை என்பது தெளிவாகின்றது எனவே பெண்களைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம். தூக்கம் உளூவை நீக்குமா? தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன. காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: நஸயீ 127, அஹ்மத் 17396, 17401, திர்மிதீ 89, 3458, 3459, இப்னுமாஜா 471 மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதற்கு மாற்றமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. எனது சிறிய தாயார் (நபிகள் நாயகத்தின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு நான் தங்கினேன். நபி (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1277 இந்த இரண்டு ஹதீஸ்களையும் ஆராயும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நின்று கொண்டு தூங்கியது நிச்சயமாக ஆழ்ந்த தூக்கமாக இருக்காது; அரைகுறை தூக்கமாகத் தான் இருந்திருக்கும். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைக்கும் வண்ணம் 'ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும்; அரைகுறை தூக்கம் உளூவை நீக்காது'என்று முடிவு செய்யலாம். மர்மஸ்தானத்தைத் தொடுவது உளூவை நீக்குமா? ஆண்களோ, பெண்களோ உளூச் செய்த பின்னர் தங்களின் மர்மஸ்தானத்தைத் தொட்டால் உளூ நீங்குமா என்பதில் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வேண்டுமென்றோ, மறதியாகவோ, நம்மை அறியாமலோ எப்படித் தொட்டாலும் உளூ நீங்கி விடும் என்று சிலர் கூறுகின்றனர். எப்படித் தொட்டாலும் உளூ நீங்காது என்று சிலர் கூறுகின்றனர். வேண்டுமென்று தொட்டால் உளூ நீங்கும்; மறதியாகத் தொட்டாலோ, நம்மை அறியாமல் மர்மஸ்தானத்தில் கை பட்டாலோ உளூ நீங்காது என்று மற்றும் சிலர் கூறுகின்றனர். இச்சையுடன் தொட்டால் உளூ நீங்கி விடும்; அவ்வாறில்லாமல் தொட்டால் உளூ நீங்காது என்று இன்னும் சிலர் கூறுகின்றனர். மர்மஸ்தானத்தை நேரடியாகத் தொட்டால் உளூ நீங்கும்; மர்மஸ்தானத்தின் மீது துணி இருக்கும் நிலையிலோ,கைகளில் உறை அணிந்துள்ள நிலையிலோ தொட்டால் உளூ நீங்காது என்று வேறு சிலர் கூறுகின்றனர். இந்தப் பிரச்சனையில் மாறுபட்ட கருத்துடைய ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது தான் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாகும். யாரேனும் தனது ஆணுறுப்பைத் தொட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வானின் மகள் புஸ்ரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 77, நஸயீ 163, அபூதாவூத் 154, இப்னுமாஜா 472, அஹ்மத் 26030, இந்த ஹதீஸ் ஆண்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது என்றாலும் இச்சட்டத்தில் ஆண்களும், பெண்களும் சமமானவர்களே என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. 'ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) நூல்கள்: தாரகுத்னீ 1/147, பைஹகீ 1/132, அல்முன்தகா 1/18, அஹ்மத் 6779 ஆண்களாயினும், பெண்களாயினும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர்களின் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த நபிமொழிகள் தெளிவாக அறிவிக்கின்றன. உங்களில் ஒருவர் திரை ஏதுமின்றி தமது உறுப்பைக் கையால் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: இப்னுஹிப்பான் 3/401, தப்ரானியின் அவ்ஸத் 2/237 தப்ரானியின் ஸகீர் 1/84 மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்துடைய ஹதீஸ்களும் உள்ளன. 'தொழும் போது ஒருவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?' என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்ற உறுப்பு தானே?' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: தல்க் இப்னு அலீ (ரலி) நூல்கள்: நஸயீ 165, திர்மிதீ 78, அபூதாவூத் 155, இப்னுமாஜா 476, அஹ்மத் 15700 இந்தக் கருத்துடைய ஹதீஸ் இப்னு ஹிப்பான் 3/403, தாரகுத்னீ 1/149, தப்ரானியின் அல்கபீர் 8/330 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமான இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று மோதுவது போல் தோற்றமளித்தால் அவ்விரு செய்திகளையும் முறையில் இணைத்து முடிவு செய்யலாம். ஒருவன் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது இரண்டு வகைகளில் ஏற்படலாம். மற்ற உறுப்புகளைப் போன்ற உறுப்பாகக் கருதி தொடுவது முதல் வகை. அந்த உறுப்பின் தனித் தன்மையைக் கருதி தொடுவது இரண்டாவது வகை. முதல் வகையான தொடுதலால் உளூ நீங்காது. இரண்டாவது வகையான தொடுதலால் உளூ நீங்கும் என்று முடிவு செய்யலாம். உடலில் குறிப்பிட்ட இடத்தில் எறும்பு கடித்தால் அந்த இடத்தில் நம் கையை வைத்து சொறிந்து கொள்கிறோம். இது போல மர்மஸ்தானத்தில் எறும்பு கடிப்பது போன்றோ, ஏதோ ஒன்று ஊர்வது போலவோ தோன்றும் போது அந்த இடத்தையும் சொறிந்து கொள்கிறோம். அந்த உறுப்பின் தனித்தன்மை கருதி அவ்வாறு செய்வதில்லை. மற்ற உறுப்புக்களைப் போல் கருதியே இதைச் செய்கிறோம். இவ்வாறு தொட்டால் உளூ நீங்காது. உள்ளாடை அணியும் போது நம்மையும் அறியாமல் அவ்வுறுப்பின் மீது நமது கை பட்டு விடலாம். மற்ற உறுப்புகளில் எவ்வாறு கை படுகின்றதோ அவ்வாறு பட்டு விட்டது என்று தான் இதை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பட்டாலும் உளூ நீங்காது. இவ்வாறு இல்லாமல் இச்சையுடன் தொட்டால் மற்ற உறுப்பைப் போல் தொட்டதாகக் கருத முடியாது. அவ்வுறுப்பின் தனித்தன்மை கருதி தொட்டதாகத் தான் கருத முடியும். இப்படித் தொட்டால் உளூ நீங்கி விடும். 'அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்றது தானே' என்று நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகத்திலிருந்து இந்தக் கருத்தை நாம் அறிந்து கொள்ளலாம். ஆணுறுப்பைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது இச்சையுடன் தொடுவதைத் தான் குறிக்கின்றது. உளூ நீங்காது என்பது சாதாரணமாகத் தொடுவதைக் குறிக்கின்றது என்று கருதும் போது இரண்டு ஹதீஸ்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. உளூ அடிக்கடி நீங்கும் நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் சொட்டுக்கள் விழுதல், அடிக்கடி காற்றுப் பிரிதல், தொடர் உதிரப் போக்கு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு உளூவை நீக்கும் காரியங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும். இத்தகைய உபாதைகள் உடையவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு தடவை உளூச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்த பின் அவர்களிடமிருந்து மேற்கண்ட உபாதைகளின் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தாலும் அதனால் உளூ நீங்காது. அடுத்தத் தொழுகை நேரம் வந்தவுடன் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். தொடர் உதிரப் போக்குடைய ஃபாத்திமா என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்.'அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கின்றேன். நான் தூய்மையாவதேயில்லை. எனவே தொழுகைகளை நான் விட்டு விடலாமா?' என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'கூடாது! அது மாதவிடாய் அல்ல! மாறாக ஒரு நோயாகும். எனவே (வழக்கமான) மாதவிடாய் நேரம் வந்ததும் தொழுகையை விட்டு விடு! அது நின்றவுடன் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 228 இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட உபாதைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டும். கடமையான குளிப்பு உளூச் செய்யும் அவசியம் ஏற்படும் போது உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது போல, குளிக்கும் அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தொழக் கூடாது. ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?என்பதைக் காண்போம். உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும் ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால் இருவர் மீதும் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 'ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும்'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 291, முஸ்லிம் 525 முஸ்லிமின் 525 அறிவிப்பில் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது. தூக்கத்தில் விந்து வெளிப்படுதல் பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது. விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை. 'அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?' என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்' என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், 'பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா?' என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது?' என்று திருப்பிக் கேட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்கள்: புகாரீ 3328, முஸ்லிம் 471 நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி) நூல்: அஹ்மத் 25869 விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது என்பதை நாம் அறிவோம். மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். அபூஹுபைஷ் என்பாரின் மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(தொழுகையை விடக்) கூடாது. அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 320 மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. ஜும்ஆவுக்கு முன் குளிப்பது அவசியம் வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'பருவ வயது அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது (வாஜிப்) கட்டாயக் கடமை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரீ 858, 879, 880, 895, 2665, முஸ்லிம் 1397 வெள்ளிக்கிழமை குளிப்பது அவசியம் என்று பொதுவாகக் கூறப்படுவதால் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவுக்குப் பின்னர் கூட குளிக்கலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் வேறு ஹதீஸ்களில் ஜும்ஆவுக்கு முன்னரே குளித்து விட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 'உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்து விடட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 877 குளிக்கும் முறை மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள். அறிவிப்பவர்: மைமூனா (ரலி) நூல்கள்: புகாரீ 260, முஸ்லிம் 476 வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று புகாரீ259வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. உளூச் செய்தல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 475 குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள் கழுவுவார்கள். அறிவிப்பவர்: மைமூனா (ரலி) நூல்கள்: புகாரீ 249, முஸ்லிம் 476 தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல் நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 474 ....பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 273, முஸ்லிம் 474 இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும் கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள். அறிவிப்பவர்: மைமூனா (ரலி) நூல்கள்: புகாரீ 257, முஸ்லிம் 476 நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், 'நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்' என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி' என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல்: முஸ்லிம் 493 'நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி' என்று நபி (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது. கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை. பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா? பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம். நபி (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம். இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன. 'அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 497 எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாங்கு - இகாமத் கடமையான தொழுகைக்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும். 'தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் தொழ வைக்கட்டும்'என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 631, முஸ்லிம் 1080 தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றை வெளிப்படுத்தி ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான்..... என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 608, முஸ்லிம் 582 பாங்கு என்பது தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக உள்ள குறிப்பிட்ட வாசகங்களாகும். இகாமத் என்பது கடமையான தொழுகை துவங்குவதற்கு முன் கூறப்படும் குறிப்பிட்ட வாசகங்களாகும். பாங்கின் வாசகங்கள் அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ் அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹ் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன். தொழுகையின் பக்கம் வாருங்கள் தொழுகையின் பக்கம் வாருங்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள் வெற்றியின் பக்கம் வாருங்கள் அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்: அபூதாவூத் 421 பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது பாங்கு சொல்பவர் வலது புறமும். இடது புறமும் தலையைத் திருப்பியதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்.... பிறகு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்... அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறும் போது இங்கும் அங்குமாக,அதாவது வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன். அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்: முஸ்லிம் 866 பாங்கு சொல்லும் போது பஜ்ர் தொழுகையில் மட்டும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறிய பின்னர் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூற வேண்டும். நான் நபி (ஸல்) அவர்களுக்கு பாங்கு சொல்பவனாக இருந்தேன். நான் பஜ்ருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ்'என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுபவனாக இருந்தேன். அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி) நூல்கள்: நஸயீ 643, அபூதாவூத் 425, அஹ்மத்14834 பாங்கிற்கு முன்னால் ஸலவாத்துச் சொல்வதும் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி ... என்று துவங்கும் வாசகங்களைக் கூறுவதும் பித்அத் ஆகும். இவ்வாறு சொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தரவில்லை. பாங்கின் அழைப்பிற்குப் பதில் கூறுதல் பாங்கைக் கேட்பவர்கள் பாங்கிற்குப் பதில் அளிப்பது அவசியமாகும். பாங்கு சொல்பவர் சொல்வதைப் போன்று கூற வேண்டும். ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது மட்டும் அரபி 'லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றில் ஈடுபடவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது) என்று கூற வேண்டும். 'பாங்கைக் கேட்டால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்று நீங்களும் கூறுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரீ 611, முஸ்லிம் 627 'பாங்கு சொல்பவர் அல்லாஹு அக்பர்' என்று கூறினால் நீங்களும் அல்லாஹு அக்பர்' என்று கூறுங்கள்.... ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று என்று கூறினால் லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்' என்று கூறுங்கள். பின்னர் அவர் ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறினால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்' என்று கூறுங்கள்...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 629 பாங்கிற்கு இவ்வாறு பதில் சொல்லி முடித்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். 'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 628 ஸலவாத்தின் வாசகங்கள் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். பொருள்: 'இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி (பரகத்) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி (பரகத்) செய்வாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்'. அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல்: புகாரீ 3370 ஸலவாத் கூறிய பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும். அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ் பொருள்: 'முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 614 மேற்கூறப்பட்ட துஆவையோ, அல்லது பின்வரும் துஆவையோ ஓதிக் கொள்ளலாம். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லஷரீ(க்)க லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. ரளீத்து பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதி(ன்)ர் ரஸூலன் வபில் இஸ்லாமி தீனா பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள். அல்லாஹ்வை அதிபதியாகவும், முஹம்மதை (இறைத்) தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்றுக் கொண்டேன். என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 631 இகாமத் கடமையான தொழுகையை நிறைவேற்றும் முன்பு இகாமத் சொல்லி தொழுகையைத் துவங்க வேண்டும். இகாமத் என்பது பாங்கைப் போன்றது தான். எனினும் அதில் சில மாற்றங்கள் உள்ளன. பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் கத்காமதிஸ்ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 605, முஸ்லிம் 569 இகாமத்தின் வாசகங்கள் அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ் அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹ் ஐவேளைத் தொழுகையின் நேரங்கள் இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர்ஆன் 4:103
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/books/tholugai/
Copyright © www.onlinepj.com
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/books/tholugai/
Copyright © www.onlinepj.com
0 comments:
Post a Comment